14. ஆறெழுத்துண்மை
சிவனுடைய திருப்பெயர்களில் ஒன்றான
நமசிவாய என்பதில் அடங்கிய எழுத்துக்கள் ஐந்தனையும்
தேர்ந்து கொண்டு திருவைந்தெழுத்து எனப் பெயர் கொடுத்து
மனத்தாற் சிந்தித்தும் வாயால் ஓதியும் வழிபடுவது போல,
முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்றான குமாராய என்பதைத்
தேர்ந்து கொண்டு நம என இரண்டெழுத்துக்களைக் கூட்டி
ஆறெழுத்து மந்திரமாகப் போற்றி ஓதி வழிபடும் மரபு
சங்ககாலச் சான்றோரிடையே நிலவி யிருந்தது.
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி என்று
நக்கீரர் நவில்கின்றார். வள்ளற் பெருமானும்
கைப்படத்தாம் எழுதிய ஏடுகளில் குமாராயநம என்றே இந்த
ஆறெழுத்து மந்திரத்தைக் குறிப்பாகக்
காட்டியிருக்கின்றார். அதனை விதிப்படி யோதி
வழிபடுவார் பெரும்பயன் அடையும் மெய்ம்மை நிலையை
இப்பத்தின்கண் ஒவ்வொரு பாட்டாலும் வற்புறுத்துகின்றா
ராதலால், இப்பத்து ஆறெழுத்துண்மை என்று பெயர்
பெற்றுள்ளது.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய
விருத்தம்
211. பெருமை நிதியே மால்விடைகொள்
பெம்மான் வருந்திப் பெறும்பேறே
அருமை மணியே தணிகைமலை
அமுதே யுன்ற னாறெழுத்தை
ஒருமை மனத்தி னுச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
இருமை வளனு மெய்துமிடர்
என்ப தொன்று மெய்தாதே.
உரை: தணிகை மலையில் எழுந்தருளும் அமுதமே வடிவானவனே, பெருமை பயக்கும் செல்வமே, பெரிய விடை மேல் இவர்ந்தருளும் சிவபெருமான் வருந்திப் பெற்ற பேறாக விளங்குபவனே, பெறுதற்கரிய மணி போல்பவனே, உனது திருப் பெயரின்கண் அமைந்த ஆறெழுத்தை மனம் ஒன்றி ஓதி உயர்ந்ததாகிய திருநீற்றை அணிந்து கொண்டால் இம்மை மறுமை என்ற இருமை நலங்களும் இனிதின் எய்தும்; துன்ப மெனப்படுவது ஒரு சிறிதும் அணுகாது, காண், எ. று.
நினைக்கும் தோறும், காணுந்தோறும், பேசுந்தோறும் அமுதம்போல் இன்பம் செய்தலால் தணிகை முருகனைத் “தணிகைமலை யமுதே” எனப் புகழ்கின்றார். பெறலாகாத பெருமையனைத்தையும் நல்கும் திருவருட் செல்வம் என்றற்குப் “பெருமை நிதியே” என்றும், ஏனை மணிகள் போலக் கடைந்து மண்ணப்படும் சிறுமை யியல்பின்றி இயல்பிலேயே ஞானவொளியும் செம்மேனியும் கொண்டு திகழ்வது விளங்க, “அருமை மணியே” என்றும் ஏத்துகின்றார். மால் விடை - பெரிய விடை. பெருமையாவது, படைத்தளித் தழிக்கும் மும்மூர்த்திகட்கும் முதல்வனாகிய சிவபரம் பொருளைத் தாங்கும் பெருமை. மால்விடையைத் திருமாலாகிய விடையென்பதும் உண்டு. ஆறெழுத்து, நமோ குமாராய என்பது; “குமார நமவென்று கூறினோர் ஓர்கால் அமராவதி யாள்வர்” எனச் சிதம்பர சுவாமிகள் உரைப்பர். “ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி” (முருகு) என்று நக்கீரனார் உரைத்தாராக, அதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர், “அது நமோ குமாராய என்பதாம்” என்று கூறுவர். பிற்காலத்தார், ஆறெழுத்தாவது சரவணபவ என்று கூறுவாராயினர். இவ்வெழுத்துக்கள் ஆறும் முறையே இருளகற்றல் வரம் தருதல், வேள்வி பேணல், ஞான மருளல், வீரம் புரிதல், இன்ப நல்குதல் என்ற ஆறு பொருள்களை வழங்குவன என்று திருமுருகாற்றுப்படை என்ற பழைய பாட்டால் அறிகின்றோம். சிவாயநம என ஓதித் திருநீறணிதல் போலக் குமாராய நம என்ற ஆறெழுத்தை ஓதித் திருநீறிடுக என்பது விதியென அறிக. அவ்வாறு அணிவதால் உண்டாகும் பயன் இது வென்பாராய்த் “திருவெண்ணீறிட்டால் இருமை வளனும் எய்தும்” என்றும், “இடர் என்பது ஒன்றும் எய்தாது” என்றும் இயம்புகின்றார். இருமை, இம்மை மறுமை என்ற இருவகைப் பயன். “இருமை வகை தெரிந்து ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்றுலகு” (குறள்) என்று சான்றோர் உரைப்பது காண்க. உச்சரித்தல் - ஓதுதல்.
இதனால், முருக வழிபாட்டுக் கின்றியமையாத ஆறெழுத்தை யோதி வெண்ணீறணியினாகும் பயன்களை உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் வற்புறுத்தவாறாம். (11)
|