212.

    எய்தற் கரிய வருட்சுடரே
        எல்லாம் வல்ல இறையோனே
    செய்தற் கரிய வளத்தணிகைத்
        தேவே யுன்ற னாறெழுத்தை
    உய்தற் பொருட்டிங் குச்சரித்தே
        உயர்ந்த திருவெண் ணீறிட்டால்
    வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும்
        வன்க ணொன்றும் வாராதே.

உரை:

     செயற்கையாற் படைக்கப்படுவதின்றி இயல்பாய் அமைந்த வளம் பலவும் பொருந்திய திருத்தணிகையில் மேவும் முருகப் பெருமானே, எளிதின் எய்தலாகாத அருள் ஞான விளக்கமே, வரம்பிலாற்ற லுடைய இறைவனே, உனக்கே யுரிய ஆறெழுத்தை உய்தி பெறும் பொருட்டு வாயால் ஓதி உயர்பொருளாகிய வெண்ணீற்றை அணிவோமாயின், குற்றமில்லாத புகழ் உண்டாகும்; இரக்கமின்மை முதலிய தீது நம்மை வந்தடையா, எ. று.

     செய்யப்படும் வளங்கள் நெடிது நிலைபெறாது கெடுதலால் இயற்கை வளத்தை உய்த்துணர வைப்பாராய்ச் “செய்தற் கரிய வளத்தணிகை” எனச் சிறப்பிக்கின்றார். தேவு, ஈண்டுத் தேவதேவன் என்பது விளங்க நின்றது, திருவருள் ஞானம் அப்பெருமான் அருளாலே எய்துவ தல்லது வேறே எவ்வாற்றாலும் பெறலரிது என்பது பற்றி, “எய்தற் கரிய அருட் சுடர்” எனப் புகல்கின்றார். எல்லாம் வல்லவன்- வரம்பிலா ஆற்றல் உடையவன் வரம்பிலாற்றல் இறைவன் குணங்கள் எட்டினுள் ஒன்று; சிவாகமங்களிற் காணப்படும் இதனை எளிமைப் படுத்தும் நெறியில் “எல்லாம் வல்ல இறையோனே” என ஞாபகம் செய்கின்றார். நல்லருண் ஞானம் எய்தினோர் பிறப்பியல்பால் மறவாமைப் பொருட்டு மானதம், மந்தம், உரை என்ற மூவகையாலும் இடையறாது ஓதுபவாகலின் “உய்தற் பொருட்டு இங்கு உன்றன் ஆறெழுத்தை உச்சரித்து” என உரைக்கின்றார். ஓதுவதால் ஆன்ம சுத்தியும், திருவெண்ணீற்றால் தேக சுத்தியும் உண்டாகின்றன. இவ்விரண்டினாலும் அத்துவ சுத்தி ஆறும் பெறப்படும். என அறிக. வைதல், காரணமாகிய குற்றத்தின் மேனின்றது. புகழ்ச்சி - புகழ். வன்கண்மை - இரக்கமில்லாமை. வன்கண்மை பல்வகைக் குற்றங்கட்குக் கொள்கலமாதலால், “வன்கண் ஒன்றும் வாராதே” எனப் பன்மை தோன்றக் கூறுகின்றார்.

     இதனால் ஆறெழுத் தோதித் திருவெண்ணீறிட்டால் வன்கண்மை யின்றாகிப் புகழ்ச்சி பெருகும் என்பதாம்.

     (2)