215.

    துன்னும் மறையின் முடியிலொளிர்
        தூய விளக்கே சுகப்பெருக்கே
    அன்னை யனையாய் தணிகைமலை
        அண்ணா வுன்ற னாறெழுத்தை
    உன்னி மனத்தி னுச்சரித்திங்
        குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
    சென்னி யணியாய் அடிசேரும்
        தீமை யொன்றும் சேராதே.

உரை:

     மனத்தால் நீங்காத மெய்யடியார் மனத்தின்கண் சுரக்கும் இன்பமாகிய சுவை வடிவே, எங்கள் தலைவனே, அகவுகின்ற மயில் மேல் இவர்கின்ற திருத்தணிகைப் பதியில் எழுந்தருளும் அருளரசே, உனக்குரிய ஆறெழுத்தைத் தூய மணம் கொண்டு வாயால் மந்தமாக ஓதித் திருவெண்ணீறு அணிந்து கொண்டால் சுகத்துடன் நிலவும் வாழ்வு தரும் இன்பம் வந்து பொருந்தும்; எத்தகைய துன்பமும் உண்டாகாது, எ. று.

     இகத்தல் - நீங்குதல். முருகப் பெருமானை நினைத்தலைக் கைவிடாத மெய்யடியார் என விளக்குதற் பொருட்டு, “இகவா அடியர்” எனவும் சிந்திக்குந் தோறும் முருகக் கடவுளின் திருவடி தேன் சுரந்தளிக்கும் திப்பிய முடையதாதலால், “மனத்தூறும் இன்பச் சுவையே” எனவும் கூறுகின்றார். குணத்தையும் குணியாக நிறுத்திப் பரவுவது சான்றோர் மரபாதல் பற்றிச் “சுவையே” எனப்பாடுகின்றார். எம்மான் - எங்கள் தலைவன்; எம்மை யுடையவன் என்றுமாம். அகவாமயில் - அகவுகின்ற மயில். குயில் கூவுவது போல் மயில் கூவுவதை, அகவுதல் என்பது இலக்கண மரபு. உகவா மனம் - உவப்புறுகின்ற மனம்; அன்பால் உயர்கின்ற மனமெனினும் பொருந்தும். உகப்பு - உயர்வையும் குறிக்கும். மனத்தின் எண்ணி வாயால் மந்தமாக உச்சரிப்பது மந்த வகையைச் சேர்ந்தது. நலம் நிறைந்த வாழ்வு சுகவாழ்வு. துன்னுதல் - அடைதல்.

     இதனால், ஆறெழுத்தை மந்தமாக உச்சரித்தால் சுக வாழ்வும் இன்பமும் வந்தடையும் என்பதாம்.

     (4)