216. சேரும் முக்கண் கனிகனிந்த
தேனே ஞானச் செழுமணியே
யாரும் புகழும் தணிகையெம
தன்பே யுன்ற னாறெழுத்தை
ஓரு மனத்தி னுச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
பாரும் விசும்பும் பதஞ்சாரும்
பழங்க ணொன்றும் சாராதே.
உரை: எத்திறத்தோரும் புகழ்ந் தோதும் தணிகைப் பதியில் மேவும் எமது அன்புடைப் பெருமானே, மூன்று கண்கள் பொருந்திய செங்கனி போன்ற சிவன் பெற்ற தேனே, ஞானமாகிய செழித்த மணி யொப்பவனே, உன்னுடைய எழுத்தாறனையும் உணர்தல் வல்ல மனத்தின்கண் சிந்தித்து உயர்ந்த திருநீற்றை அணிந்து கொண்டால் மண்ணவரும் விண்ணவரும் சிவபதப் பயன் பெறுவர்; துன்ப மொன்றும் வந்தடையாது, எ. று.
வேண்டுவார் வேண்டாதார் உற்றவர் உறாதவர் என்ற வேறுபாடின்றி யாவராலும் புகழப்படுவது பற்றி, “யாரும் புகழும் தணிகை” எனவும், உண்மையன்புக்குரிய உயர் பரம்பொருளாய் விளங்குவதால், “எமது அன்பே” எனவும் பராவுகின்றார். ஆய்த வெழுத்துப் போல அமைந்திருத்தலின், “சேரும் முக்கண்” என்றும், அருள் நிறைந்து திகழும் சிவமாய் இலங்குவது கொண்டு, “முக்கட் கனி” என்றும் சிவத்தில் தோன்றியது பற்றி முருகப் பெருமானைத் “தேனே” என்றும் தெரிவிக்கின்றார். ஞானத் திரளாய்த் திகழ்வதால் “ஞானச் செழுமணி” என்கின்றார். “ஞானத் திரளாய் நின்ற பெருமான்” (அண்ணா) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. சிந்திக்கும் செயலுடைமையின் மனத்தை “ஓரும் மனம்” எனச் சிறப்பிக்கின்றார். ஆறெழுத்தை விதிப்படி யோதுவதாலும் திருவெண்ணீற்றை உடனணிந்து கொள்வதாலும் சிவபதம் கை வருதல் பற்றிப் “பாரும் விசும்பும் பதம் சாரும்” எனவும், பயிற்சி வாசனையும் அற்றொழியும் என்றற்குப் “பழங்கண் ஒன்றும் படராதே” எனவும் உரைக்கின்றார். பழங்கண் - துன்பம். “பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு” (அகம். 48) என்று சான்றோர் வழங்குதல் காண்க.
இதனால் திருவாறெழுத்தை ஓதுகின்ற மக்கள் தேவர் முதலியோர் துன்பமுறாது சிவபோகம் பெறுவர் என்பதாம். (6)
|