217. சார்ந்த அடியார்க் கருளளிக்கும்
தருமக் கடலே தற்பரமே
வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை
மணியே யுன்ற னாறெழுத்தை
ஓர்ந்து மனத்தி னுச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஆர்ந்த ஞான முறும்அழியா
அலக்க ணொன்றும் அழிந்திடுமே.
உரை: நீண்ட பொழில்கள் சூழ்ந்த தணிகைப் பதி மேவும் மணியே, திருவடியே நினையும் மெய்யடியார்க் கருள் வழங்கும் அறக்கடலே, தற்பரமே, உனக்குரிய ஆறெழுத்தை மனத்தின்கண் உணர்ந்து ஓதி உயர்ந்த பொருளாகிய திருவெண்ணீற்றை அணிந்து கொண்டால் நிறைந்த ஞான மெய்தி நிலைபெறும்; துன்ப வகை ஒன்றும் இல்லாமல் ஒழிந்து போம், எ. று.
சார்தல் - சிந்தித்தல். முருகன் திருவடிகளை நினைந்தடையும் மெய்யன்பர்களை ஈண்டுச் “சார்ந்த அடியார்” என்றும், அவர்கட்குப் பேரருள் நல்கும் பெருமை பற்றி, “அருள் அளிக்கும் தருமக் கடலே” என்றும், தன்னை யொப்பதும் தனக்கு மிக்கது மில்லாத பரம்பொருள் என்றற்குத் “தற்பரமே” என்றும் பராவுகின்றார். உண்மை யுணர்ந்த சிந்தையை, “ஓர்ந்த மனம்” என்று கூறுகிறார். ஆர்ந்த ஞானம் - முழுத்த சிவஞானம். தோன்றுகின்ற ஞானம் பின்பு நில்லாது நீங்குவதன்று என்று விளக்குதற்கு, “ஆர்ந்த ஞானமுறும் அழியா” எனவும், நிலைபெறாவாறு மறைக்கும் துன்பங்கள் ஒன்றும் எய்தாவாம் என்பாராய் “அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே” எனவும் உரைக்கின்றார்.
இதனால், ஆறெழுத்தை ஓதித் திருநீறணிவார் பால் சிவஞானம் வந்து நிறையும் என விளம்பியவாறாம். (7)
|