219.

    பதியே யெங்கும் நிறைந்தருளும்
        பரம சுகமே பரஞ்சுடரே
    கதியே யளிக்கும் தணிகையமர்
        கடம்பா வுன்ற னாறெழுத்தை
    உதியேர் மனத்தி னுச்சரித்திங்
        குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
    துதியேர் நினது பதந்தோன்றும்
        துன்ப மொன்றும் தோன்றாதே.

உரை:

     உலகு உயிர்கட் கெல்லாம் பதிப் பொருளாக வுள்ளவனே, எவ்விடத்தும் நிறைந்து விளங்கும் பரம சுகப் பொருளே, மேலாய சுடரே, உயிர்கட்கு முத்தி நல்கும் தணிகைக் கடம்பனே, உனக்குரிய ஆறெழுத்தை நல்ல எண்ணங்கள் தோன்றுமிடமாகிய மனத்தின்கண் சிந்தித்தோதி உயர் பொருளாகிய திருவெண்ணீற்றை அணிந்து கொண்டால், துதிக்கப்படும் நினது திருவடி யின்பம் எய்தப் பெறலாம்; பிறவித் துன்பம் உண்டாகாது, எ. று.

     உலகைப் படைத்து உயிர்கட்கு வேண்டும் அகமும் புறமுமாகிய கருவிகளைப் படைத்தளித்து வாழச் செய்யும் முதல்வனாதல் பற்றி இறைவனைப் “பதி” என்றும், இறைவனாதல் இனிது விளங்க, “எங்கும் நிறைந்தருளும்” என்றும், பரம்பொருளை யடைவார் பெறும் பயனாதலால், “பரம சுகமே” என்றும், பரம சுகத்தை நுகர்தற் கேதுவாகிய ஞானம் வழங்குதல் தோன்றப், “பரஞ்சுடரே” என்றும் கூறுகின்றார். “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர்” (சிவ சித்தி) என்று அருணந்தி சிவனார் உரைப்பது காண்க. கதி - சிவபோகம் துய்த்தற்கு அமையும் சிவகதி. கடம்புமாலை யணிபவனாதலால், “கடம்பா” என்று கூறுகிறார். எண்ணங்கள் எழுதற்குரிய இடமாதலால் மனத்தை, “உதியேர் மனம்” எனச் சொல்லுகின்றார். உதி - உதித்தற் பொருளில் வந்த முதனிலைத் தொழிற் பெயர். துதிக்கப்படுவதால் திருவடி, “துதியேர் பதம்” எனப்படுகிறது. துன்பம் - ஈண்டுப் பிறவித் துன்பத்தின் மேற்று.

     இதனால் முருகன் ஆறெழுத்தை மானதமாய் உச்சரித்து வெண்ணீறிடுவார், பிறவித் துன்பத்தின் நீங்கிச் சிவகதி பெறுவர் என்பதாம்.

     (9)