22.

    மனமான வொருசிறுவன் மதியான குருவையும்
        மதித்திடா னின்னடிச் சீர்
        மகிழ்கல்வி கற்றிடான் சும்மா விரான்காம
        மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்
    சினமான வெஞ்சுரத் துழலுவனு லோபமாம்
        சிறுகுகையி னூடு புகுவான்
        செறுமோக விருளிடைச் செல்குவான் மதமெனும்
        செய்குன்றி லேறி விழுவான்
    இனமான மாச்சரிய வெங்குழியி னுள்ளே
        இறங்குவான் சிறிது மந்தோ
        என்சொல் கேளானெனது கைப்படான் மற்றிதற்
        கேழையே னென்செய்குவேன்
    தனநீடு சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     செல்வம் மிகுகின்ற சென்னைக் கந்த கோட்டத்திலுள்ள கோயிலில் எழுந்தருளும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளிற் சிறந்த சைவ மணியாகிய சண்முகம் கொண்ட தெய்வமணியே, எனது மனமாகிய ஒரு தனிச் சிறுவன் அறிவாகிய குருவையும் மதிப்பதில்லை; நின்னுடைய திருவடிப் புகழை விரும்பி யுரைக்கும் கல்வியைக் கற்க மாட்டானாயினும் சும்மா வாகவும் இருக்கின்றானில்லை. காமம் என்னும் மடுவில் வீழ்ந்து சுழல்கின்றான்; சினமென்னும் வெம்மை நிலவும் சுரத்தின் கண் திரிகின்றான்; உலோபம் என வுரைக்கப்படும் சிறு குகையிற் புகுந்து கொள்கின்றான்; பகை செய்யும் மோக மென்னும் இருளிற் சென்று இடர்படுவதும், மதம் எனப்படும் செய்குன்றின் மேல் ஏறிக்குப்புற வீழ்வதும் செய்கின்றான்; அம்மதத்துக்கினமான மாற்சரிய மென்ற வெவ்விய குழியில் இறங்குகிறான்; ஐயோ, சிறிதும் என் சொல்லைக் கேளா தொழியும் அவன் என் கைக்கும் அகப்படுகிறானில்லை; ஏழையாகிய யான் இதற்கு என்ன செய்வேன்; நீதான் துணை செய்தல் வேண்டும், எ. று.

     செல்வ வாழ்வே சிறந்து தோன்றுதலால் “தனம் நீடு சென்னை” என்று பாராட்டுகின்றார். பிறந்து மொழி பயின்று அறிவுற்ற போது தனது உண்மை தோற்றுவித்தலால் மனத்தை “ஒரு சிறுவன்” என உருவகம் செய்கின்றார். அறிவு வழி யடங்கி நில்லாமையால் மதியான குருவையும் “மதித்திடான்” என்றும், அக் குரு முதல்வன் கற்பிப்பது இறைவன் திருவடி பரவும் மெய்ப்பொருட் கல்வி என்றற்கு, “நின் அடிச்சீர் மகிழ்கல்வி” எனவும், அதனைக் கல்லா தொழிவது பற்றிக் “கற்றிடான்” எனவும் கூறுகின்றார், ஆழ்ந்து நீர் நிறைந்து நிலை கொள்ளாத நீர் நிலையாய மடுப் போலக் காமமும் தன்கண் வீழ்ந்தாரை எழாமல் அலமரச் செய்யும் இயல்பிற்றாதலின், “காம மடு” எனக் குறிக்கின்றார். அதன்கண் தோய்ந்த மனமும் நிலை கொள்ளாமல் சுழலுகின்ற தென்பார், “காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்” எனவுரைக்கின்றார். வெயில் நின்று வெதுப்பும் நிலப்பகுதி சுரம்; அது போல் சினமும் வெம்மை செய்வதால் “சினமான வெஞ்சுரம்” என்கின்றார். உலோபமாகிய குற்றம் தங்கிய மனம் குகைபோல் இருண்டு கிடத்தில் பற்றி, “உலோபமாம் சிறுகுகை” எனவும், மோகமாகிய குற்றம் அறிவை இருள் படுத்திப் பகையாய்த் துன்பம் உறுவித்தலால், “செறுமோக இருள்” எனவும் கூறுகின்றார். இயற்கையாய் இன்றி, மெய்வலி பொருளுடைமை காரணமாகத் தோன்றுதலால், “மதமெனும் செய்குன்” றென்றும், மாற்சரிய மென்னும் பகைமைக் குற்றம் தீக்குழி போல் வீழ்ந்தாரை எரித்தழிக்கும் இயல்பிற்றாதலால், “மாற்சரிய வெங்குழி” என்றும் உருவகிக்கிறார். மனம் தன்னை யுடையான் வழி நிற்பதின்றி நிறுத்த நில்லாமல் ஓடுவதால், “அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான்” என்றும், தனது மாட்டாமை தோன்ற, “ஏழையேன்” என்றும், அதனை அடக்கி நெறி நிறுத்தற்கேற்ற அருள்வலி அருள வேண்டும் என்பார், “என் செய்குவேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால் மனம் காம முதலிய குற்ற நெறிகளில் இயலும் திறம் கூறி அதனை அடக்கி நிறுத்தற் கேற்ற அருள் புரிக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (22)