220.

    தோன்றா ஞானச் சின்மயமே
        தூய சுகமே சுயஞ்சுடரே
    ஆன்றார் புகழும் தணிகைமலை
        அரசே யுன்றன் ஆறெழுத்தை
    ஊன்றா மனத்தின் உச்சரித்திங்
        குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
    ஈன்றா ணிகரும் அருளடையும்
        இடுக்க ணொன்றும் அடையாதே.

உரை:

     நன்ஞான நற்செயல்களால் அமைந்த பெரியோர் புகழ்ந்து பாராட்டும் தணிகை மலையில் எழுந்தருளும் அருளரசே, கருவி கரணங்கட்குத் தோன்றாத சிவஞானமருளும் ஞானத் திருவுருவே, சிவஞானப் பயனாகிய தூய சுக வடிவனே, தனிப்பெரும் சுடரொளியே, உனக்குரிய ஆறெழுத்தை நிலையுறுத்த மனத்தின்கண் நினைந்தோதி, உயர் பொருளாகிய திருவெண்ணீற்றை அணிந்து கொண்டால் பெற்ற தாயினும் பெரு நலம் பயக்கும் திருவருள் வந்தெய்தும்; எவ்வகைத் துன்பமும் வாராது, காண், எ. று.

     நற்குண நற்செய்கைகளாலும் நன்ஞான நல்லொழுக்கங்களாலும் நிறைந்தமைந்த சான்றோரை, “ஆன்றோர்” எனக் குறிக்கின்றார். “கருணையிலா ஆட்சியை” ஆன்றோர் விழைவதும் புகழ்வதும் செய்யாராதலால், “ஆன்றோர் புகழும் தணிகை மலையரசே” எனப் பராவுகின்றார். கண் முதலிய கருவிகளாலும், மனம் முதலிய கரணங்களாலும் உலகியல் ஞானம் தோன்றுதலால், திருவருளால் தோன்றும் சிவஞானத்தைத், தோன்றா ஞானச் சின்மயமே” என்று சிறப்பிக்கின்றார். சின்மயம் - ஞானத் திருவுருவம். சிவஞானத்தாற் பெறப்படும் இன்பம், “தூய சுகம்” எனப்படுகிறது. உலகியல் ஒளிப் பொருட் கெல்லாம் ஞாயிற்றால் ஒளி யுண்டாதல் போலின்றித், தனக்குத் தானே முதலும் இடமுமாய் இலங்குதலின், சிவத்தின் தனிப்பெருஞ் சோதியைச் “சுயஞ் சுடரே” என்று போற்றுகின்றார். கறங்குபோற் சுழலும் இயல்பினதாகிய மனத்தை ஓதப்படும் பொருளிடத்தே ஒன்றுவித்தாலன்றிப் பயன் விளையாமை கண்டு, “ஊன்றா மனத்தின் உச்சரித்து” என ஆறெழுத்தை ஓதும் முறை இது வென வலியுறுத்துகின்றார். ஊன்றாம் மனம் - ஊன்றி நிற்றற் கேற்புடைய மனம். அலையும் இயல்பிற்றாயினும் அறிவால் நிறுப்ப நிலையுறும் நீர்மையது என்றற்கு இவ்வாறு இயம்புகின்றார். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பிரிந்து” திருவருள் நலம் செய்யும் எனச் சான்றோர் புகலுதலால், “ஈன்றாள் நிகரும் அருள் அடையும்” என வுரைக்கின்றார். எத்தகைய இடுக்கண் வரினும் நகைத் தழிக்கும் அறிவாற்றலும் மனத்திண்மையும் உண்டாம் என்பாராய், “இடுக்கண் ஒன்றும் அடையாது” என அறிவுறுத்துகின்றார்.

     இதனால் ஆறெழுத்தை யோதித் திருவெண்ணீறணிந்து கொண்டால், இடுக்கண் யாதுமின்றித் திருவருள் இன்ப வாழ்வு எய்தலாம் என்பதாம்.

     (10)