222.

    பாவ வாழ்க்கையிற் பாவியேன் செய்திடும்
        பண்பிலாப் பிழைநோக்கித்
    தேவ ரீர்மன திரக்கமுற் றேயருள்
        செய்திடா திருப்பீரேல்
    காவ லாகிய கடும்பிணித் துயரமிக்
        கடையனேன் றனக்கின்னும்
    யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ
        இயலும்வேற் கரத்தீரே.

உரை:

     சிவ சத்தியால் இயன்ற வேற்படையை யுடைய பெருமானே, பாவ வினையே மிகுகின்ற உலகியல் வாழ்விற் பாவமே புரியும் எளியேன் செய்தொழுகும் நலமில்லாத குற்றங்களைப் பார்த்துத் தேவ தேவனாகிய நீ திருவுள்ளத்தில் இரக்கம் கொண்டு அருள்புரியா தொழிவாயாயின், காவலாய்ச் சூழ்ந்துள போன்ற மிக்க நோய்கள் கிளைவிக்கும் துயரம் கடையவனாகிய எனக்கு இன்னும் எத்தகைய துன்பத்தைச் செய்யுமோ; யான் யாது செய்ய வல்லேன், எ. று.

     வாழ்க்கைக்கு இன்றியமையாதவை மனம் மொழி மெய் யென்ற மூன்றுமாகும்; இவற்றால் முறையே நினைத்தலும் பேசுதலும் செய்தலும் ஆகிய வினை நிகழும்போது ஆகாதன எனப்படும் தீவினைகள் பெருகுதலால், உலக வாழ்வைப் “பாவ வாழ்க்கை” என்றும், இதன்கண் வாழ்க்கை நடத்துகின்ற யான் பாவமே மிகச் செய்கிறேன் என்பார், “பரவியேன்” என்றும், இருண் மலத்தால் மறைக்கப்பட்டுச் செய்யும் பாவம் பண்புடைப் பாவமாக, மறைப்பின்றிச் சத்துவ குண விளக்க நிலையிலும் பாவம் செய்கின்றேனாதலால் என் பாவம், “பண்பிலாப்பிழை” என்றும் உரைக்கின்றார். பண்புடைப் பாவத்தைத் தெரிந்துரைத்த போது பொறுத்தருளும் பெருமானாகிய நீ, பண்பிலாப் பிழைகளை நோக்கி முனிந்து விலக்குதல் அருளாமையாகாதாயினும், என்பால் அருள் கொண்டு அதனைத் துடைத்தருளல் வேண்டு மென்பார், “தேவரீர் மனதிரக்க முற்றே அருள் செய்திடல்” வேண்டுமென இறைஞ்சுகின்றார். முருகப் பெருமான் அருளாராயின் தமக்கு எய்தும் துன்பம் இதுவென விளம்பலுற்று, அருள் செய்திடா திருப்பீரேல், “கடும்பிணித் துயரம் இன்னும் யாவதாகுமோ” எனக் கூறுகின்றார். சூழ வேலி யிட்டது போலப் பல்வகைப் பிணிகள் உடம்பின் உள்ளும் புறமும் மொய்த்துக் கொண்டிருத்தலால், “காவலாகிய பிணி” எனவும், அவற்றின் மிகுதி தோன்றக் “கடும்பிணி” எனவும், அவற்றால் விளைவது துயரமாதலால், “கடும்பிணித் துயரம்” எனவும், இப்போதே ஊண் உறக்கம் நல்லுணர் வாகியவற்றை ஒழித் தழிக்கும் இத்துயரம் பின்னர் எத்தகைய தீமையை உண்டு பண்ணுமோ என அஞ்சுகிறேன் என்பாராய், “இன்னும் யாவதாகுமோ” எனவும், கையறவு மிக்கமை புலப்பட “என்செய்கோ என் செய்கோ” என அடுக்கியும் மொழிகின்றார். மிகுதிப் பொருளைத் தரும் கடி யென்னும் உரிச்சொல் கடும்பிணி எனத் திரிந்து நின்றது. கடையன் - கடைப்பட்டவன்.

     இதனால், தேவரீர் அருளா தொழியின் எத்தகைய துயரம் எய்துமோ என அஞ்சி முறையிட்டவாறாம்.

     (2)