223. சேவி யாதஎன் பிழைகளை என்னுளே
சிறிதறி தரும்போதோ
பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள்
பதைத்திடக் காண்கின்றேன்
ஆவி யேயரு ளமுதமே நின்றிரு
வருடனக் கென்னாமோ
பூவி னாயகன் போற்றிடும் தணிகையம்
பொருப்பமர்ந் திடுவாழ்வே.
உரை: பிரம தேவன் வணங்கித் துதிக்கும் தணிகை மலையில் எழுந்தருளும் வாழ்வே, என் உயிரே, திருவருளாம் அமுதமே, உன் திருமேனியைக் கண்டு வழிபடாத தவறுகளைச் சிறிது போது நினைவு கூரும்போது பாவியாகிய என் மனம் பகீரென்று வெம்பி உள்ளம் துடிக்கக் காண்கிறேன்; நின் அருள் நிறைந்த திருவுள்ளம் யாது நினைக்குமோ, அறியேன், எ. று.
பூவின் நாயகன்-பிரமதேவன். பிரமன் பூசித்த திருப்பதி தணிகையெனத் தலபுராணம் கூறுகிறது. பூவினாயகன் எனபது பூமகள் நாயகனான திருமாலுக்கும் ஆதலின், திருமால் இப்பதிக்கும் போந்து வழிபட்டான் என்று தணிகைப் புராணம் கூறுவதைக் குறிப்பதாகக் கொள்வதும் ஒன்று. வாழ்வு தரும் முதல்வனாதலால், “வாழ்வே” என முருகனை உபசரிக்கின்றார். ஆவி-உயிர். திருவருளாகிய ஞானத்தை அமுதம் போல் வழங்குமாறு தோன்ற, “அருளமுதமே” என்று கூறுகின்றார். திருவருள் ஈண்டு திருவருள் நிறைந்த உள்ளத்துக் காயிற்று. பிழை புரிந்து பின்னர் உணர்ந்து வருந்தும் ஆன்மாவின் பால் கழிபேரிரக்கம் புரிவது முருகன் திருவுள்ளத்தின் இயல்பாதலால், “நின் திருவருள் தனக்கு என்னாமோ” என்று மனமுருகுகின்றார். இறைவனைச் சேவித்தல், அவன் அருளிய உடல், கருவி கரணங்கள் உலகம், உலக போகங்களாகியவற்றைப் பெற்று வாழும் உயிர்கட்குக் கடனும் அறமுமாதலால் அது செய்யாமை குற்றம் என்பார், “சேவியாத என் பிழை” என்றும் பன்னாள் சேவியா தொழிந்தமை புலப்படச் “சேவியாத பிழைகள்” எனப் பன்மை வாய்பாட்டிலும் உரைக்கின்றார். சேவித்தல்-திருமேனி கண்டு வணங்கி வழிபடல். சுழலும் இயல்பினதாகிய மனத்தின்கண் செய்தனவும் செய்யாதனவும் ஆகியவற்றின் நினைவுகள் கடலும் அலையும் போல் எழுந்து மறைவது விளங்க, “என்னுளே சிறிது அறிதரும் போது” எனவும், அறவுணர் வுடையார்க்கு அதனை மறந்தயர்ந்து நினைவு கூரும் போது மனம் வெம்பி வருந்துவது இயல்பாதலால், “பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள்ளம் பதைத்திடக் காண்கின்றேன்” எனவும் இயம்புகின்றார். பகீலென-குறிப்பு மொழி; இது பகீரென என்றும் வழங்கும். புந்தி வட்டத்தின் உள்ளகம் உள்ளம் எனப்படுகிறது. “என்னெஞ்சில் ஈசனைக் கண்டதென் உள்ளமே” என நாவுக்கரசர் உரைப்பது ஈண்டு நோக்கத் தக்கது.
இதனால், சேவிக்க வேண்டிய கடமையை மறப்பதும் நினைப்பதும் தமது மனப் போக்காக இருக்கும் திறம் தெரிவித்தவாறாம். (3)
|