226. மண்ணி னண்ணிய வஞ்சகர் பால்கொடு
வயிற்றினா லலைப்பட்டேன்
கண்ணி னண்ணருங் காட்சியே நின்திருக்
கடைக்கணோக் கருணோக்கி
எண்ணி யெண்ணிநெஞ் சழிந்துகண் ணீர்கொளும்
ஏழையேன் றனக்கின்னும்
புண்ணி னண்ணிய வேலெனத் துயருறில்
புலையனென் செய்கேனே.
உரை: மண்ணுலகில் வாழ்கிற வஞ்சகரிடம் சென்று கொடிய வயிற்றுணவுக்காக நான் பெரிதும் அலைக்கப் பட்டேன்; கண்களாற் காண்பதற் கரிய காட்சியானவனே, உன்னுடைய கடைத் திருக்கண்களிடத்தே பெறப்படும் திருவருட் பார்வையை எதிர்நோக்கிப் பலகாலும் நினைந்து மன வூக்கம் இழந்து கண்ணீர் சொரியும் ஏழையாகிய எனக்குப் புண்ணில் வேல் நுழைவது போலத் துன்பம் வந்துறுமாயின் புலையனாகிய யான் யாது செய்வேன், எ. று.
ஞான வுடம்பினனாகிய முருகப் பெருமானைப் பூத வுடம்பின் கட் பொறிகளால் காண்பது இல்லையாதலால், “கண்ணில் நண்ணருங் காட்சியே” என்று கூறுகின்றார். “ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினில் சிந்தை நாடுக” (சிவஞான போதம்) என மெய்கண்டார் முதலிய சான்றோர்கள் உரைப்பதால் அறிக. மெய்கண்டாரை நம் வடலூர் வள்ளல், “விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன்” என்று பாராட்டுவதை, “வல்லபை கணேசர் பிரசாத மாலை”யிற் காண்க. வஞ்சமுடைய மனமுடையவர்க்கு வாழ்வு மண்ணுலகத்தி லாதலால் “மண்ணில் நண்ணிய வஞ்சகர்” என்றும், வயிற்றுக்கு உணவு வேண்டி அவரிடம் சென்று அவர்கள் பின்னையென்றும் நாளை யென்றும் சொல்லி அலைவித்தது இனிது விளங்கக் “கொடுவயிற்றினாள் அலைப்பட்டேன்” என்றும் உரைக்கின்றார். “வயிற்றின் கொடுமையால் நாழியரிசிக்கே நாம்” (நல்வழி) என ஒளவையாரும், “சிந்தை கெட்டுச் சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே” எனப் பிற்காலப் பட்டினத்தாரும் கூறுவர். முருகப் பெருமானுடைய திருவருட் பார்வை பதியுமாயின் இவ்வாறு துன்புற வேண்டுவதில்லை யெனச் சான்றோர் அறிவுறுத்தலால், “நின் திருக்கடைக் கண்ணோக்கருள் நோக்கி” என்றும், அதனைப் பெறுதற்குரியவற்றைப் பலகாலும் பல்வகை யாலும் நினைந்து கண்ணீர் சொரிந்து புலம்பிய குறிப்பை, “எண்ணி எண்ணி நெஞ்சழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்” என்றும் இயம்புகின்றார். பசித்துன்பம் ஒருபுறம் இருக்கப் பிறவித் துன்பத்துள் ஆதி பௌதிகம், ஆதி யான்மிகம், ஆதி தைவிக மெனப் படுவனவற்றால் எய்தும் துன்பங்களைக் குறிப்பாராய்ப் “புண்ணில் நண்ணிய வேல் எனத் துயர் உறில்” என வுரைத்து, இவற்றினின்றும் உய்தி பெறுதற்குச் செய்வ தொன்றும் அறிகிலேன் என்பாராய், “என் செய்கேனே” எனவும், இத்துன்பங்களால் புலைத்தன்மை எய்தியுளேன் என்பார், “புலையன்” எனவும் புகல்கின்றார்.
இதனால் பசித் துன்பத்துக்காக வஞ்சகர்களால் அலைக்கப் படுவதும் ஏனைப் பிறவித் துன்பங்கட்கு அஞ்சுவதும் கூறியவாறாம். (6)
|