227. மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ
வருந்திநெஞ் சயர்வுற்றே
கலங்கி நின்திருக் கருணையை விழையும்என்
கண்ணருள் செய்யாயோ
இலங்கி யெங்கணும் நிறைந்தரு ளின்பமே
எந்தையே எந்தாயே
நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர்
நாயக மணிக்குன்றே.
உரை: எங்கும் நிறைந்து விளங்கியருளும் இன்பப் பொருளே, எமக்குத் தந்தையே, எமது தாயே, நலம் பொருந்திய தணிகைப் பதியில் எழுந்தருளும் தலைவனே, மாணிக்க மலை போல்பவனே, அறிவு மயங்கி வஞ்சகர்களை யடைந்து அவரது வஞ்சத்தால் வருத்த மெய்தி மனம் அயர்ச்சி யுற்றுக் கலங்கி நினது திருவருளை விழைந்து நோக்கும் எனக்கு அருள் செய்வாயோ, கூறுக, எ. று.
இறைவனாதலின் எங்கும் எப்பொருளினும் நீக்கமற நிறைந்து விளங்கும் அவனது இயல்பை, “இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே” என்று புகழ்கின்றார். இன்பமே அவனுடைய உருவும் திருவுமாதலால், “இன்பமே” எனக் கூறுகின்றார். “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே” (கோயிற்) என்பர் மணிவாசகர். உயிர்கட்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு காட்டும் வகையில், “எந்தையே எந்தாயே” என்கின்றார். இனிது வாழ்தற் கமைந்த நலம் உடைமை பற்றி, “நலம் கிளர்ந்திடும் தணிகை” என்றும், அங்கே தலைவனாய்க் கோயில் கொண்டருளுதலால், “நாயக” என்றும், மாணிக்க மலை போல நிறத்தாலும் பொற்பாலும் வீறுடன் விளங்குவது பற்றி, “மணிக்குன்றே” என்றும் பராவுகின்றார். மலங்குதல் - அறிவு மயங்குதல். வஞ்சகரின் வஞ்சம் அறியாதபடி அறிவு மயங்குதலால், “மலங்கி வஞ்சகர் மாட்டு இரந்து” எனவும், இரத்தலைக் கண்டு எள்ளி யிகழ்வதால் மனம் நோதலால், “வருந்தி நெஞ்சு அயர் வுற்றேன்” எனவும், அயர்வு தோன்றும் போது கலக்க முண்டாதல் பற்றிக் “கலங்கி” எனவும் இயம்புகின்றார். மலங்கும் அறிவும் கலங்கும் மனமும் தெளிவடைதற்குத் திருவருள் விளக்கம் வேண்டப்படுதலால், “நின் திருக்கருணையை விழையும் என்கண் அருள் செய்யாயோ” எனக் கேட்கின்றார்.
இதனால், அறிவும் மனமும் கலங்கிய நிலையில் திருவருளை விழையும் தமது போக்கை வெளிப்படுக்கின்றார். (7)
|