228.

    சைவ நாயக சம்பந்த னாகிய
        தமிழருட் குன்றேயென்
    தெய்வ மேநினை யன்றியோர் துணையிலேன்
        திருவரு ளறியாதோ
    வைவ தேகொளும் வஞ்சகர் தம்மிடை
        வருந்திநெஞ் சழிகின்றேன்
    செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன்
        தெளிவிலாச் சிறியேனே.

உரை:

     சைவ நெறிக்குத் தலைவனே, திருஞான சம்பந்தராகத் தோன்றிய தமிழ் விரும்பும் திருவருட் குன்றமே, யான் வணங்கும் தெய்வமே, உன்னை யன்றி வேறு ஒருவரைத் துணையாகக் கொண்டேனில்லை; இது உன் திருவுள்ளம் அறிந்த தன்றோ? கண்டாரை இகழ்ந்து ஏசுவதையே தொழிலாகக் கொண்ட வஞ்சகர் கூட்டத்தில் சேர்ந்து மனம் வருந்தித் தளர்கின்றேனாதலால் செய்யத் தக்கது இதுவெனத் தெரிகின்றேனில்லை; இந்நிலையில் என்னைக் கைவிடில், தெளிந்த அறிவில்லாமல் சிறுமையுடையேனாய்ச் செயலற்றிருக்கின்றேன், எ. று.

     சைவம் - சைவ நெறி; அஃதாவது சிவசம்பந்தம் எய்திச் சிவமாம் தன்மை யடையும் செந்நெறி. “சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது” என்பர் திருமூலர். சி்வநெறிக்குரிய சிவஞானத்தை வழங்கும் சிவகுரு நாதன் எனப்படுவதால் முருகப் பெருமானைச் “சைவ நாயக” என்று புகழ்கின்றார். முருகப் பெருமான் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன் தமிழகத்தில் திருஞான சம்பந்தராகத் தோன்றினார் என்றொரு கொள்கை சுமார் முந்நூறு ஆண்டுகட்கு முன் தோன்றி நிலவிற்று. அருணகிரிநாதர் முதலியோர் அக்கொள்கையை மேற் கொண்டிருந்தனர். அதனால் வடலூர் வள்ளல், “சம்பந்தனாகிய தமிழருட் குன்றே” என்று போற்றுகின்றார். ஞானசம்பந்தர் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று மொழிவதால், “தமிழருட் குன்றே” என்கின்றார். முருகனைத் தமிழ்க் கடவுள் என்றும், முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன் என்றும் பெரியோர் போற்றுவதுண்டு. தனக்குள்ள உரிமை புலப்பட, “என் தெய்வமே” என இசைக்கின்றார். வேறு தெய்வத்தை நினையாமை தோன்ற, “நினையன்றி ஓர் துணை யில்லேன்” என்று சொல்லுகிறார். முருகப் பெருமான் தெரிய அவரை முன்னிலைப் படுத்தி மொழிதலால், “திருவருள் அறியாதோ” என்கின்றார். திருவருளே முருகன் திருவுள்ளமாதலால் திருவுள்ள மென்னாமல், “திருவருள்” எனத் தெரிவிக்கின்றார். முன்னின்று செவி யினிக்கப் பேசி பின்னே வாய் கசக்க வைதுரைப்பது வஞ்சக மாதலால், “வைவதே கொளும் வஞ்சகர்” எனவும், பிரிந்தேக மாட்டாது அவர் சூழலிற் சிக்குண்டு வருந்துகின்ற தமது அவல நிலையை, “வஞ்சகர் தம்மிடை வருந்தி நெஞ்சழி கின்றேன்” எனவும், செயலற்ற திறத்தைச் “செய்வதோர்கிலேன்” எனவும், தெளிவின்றி மயங்கும் போது தெளிவு தந்து உய்விக்கும் பெருமானாகிய நீ அது செய்யாது கை விடுவாயாயின், செயல்வேறு இன்றிக் கெடுவேன் என்பார், “கைவிடில் என்செய்கேன்” எனவும் எடுத்துரைக்கின்றார்.

     இதனால், வஞ்சர் சூழலிற்பட்டுத் தெளிவிலாமையால் சிறுமையெய்திச் செயலறும் தமது போக்கினை விளம்பியவாறாம்.

     (8)