23.

    வாய்கொண் டுரைத்தலரி தென்செய்கே னென்செய்கேன்
        வள்ளலுன் சேவடிக் கண்
        மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
        வாய்ந்துழலு மெனது மனது
    பேய்கொண்டு கள்ளுண்டு கோலினான் மொத்துண்டு
        பித்துண்ட வன்குரங்கோ
        பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
        பேதை விளையாடு பந்தோ
    காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங்கோ பெருங்
        காற்றினாற் சுழல் கறங்கோ
        காலவடிவோ இந்த்ர சாலவடிவோ எனது
        கர்ம வடிவோ அறிகிலேன்
    தாய்கொண்ட சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     தாய்மைச் செயல் சிறந்த சென்னைக் கந்த கோட்டத்தில் உள்ள கோயிலில் எழுந்தருளும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளி பொருந்திய தூயமணியின்மிக்க சைவமணியாகிய சண்முகங்களை யுடைய தெய்வ மணியே, என்மனத்தின் இயல்பை வாயால் உரைக்க முடியாது; எளியேன் என்ன செய்வேன்; வள்ளலாகிய உன் சேவடிக்கண் ஒன்றி நில்லாமல் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு உழலுவதாகிய அம்மனது பேய் பிடித்துக் கள் குடித்துக் கோலால் அடியுண்டு பித்துக் கொண்ட குரங்கென்பதோ, மட்குயவன் என்று சொல்லப்படுகின்ற குலாலனாற் சுழற்றப்படுகிற சக்கரம் என்பதோ, சிறுவர் கைக்கொண்டு விளையாடும் பந்து என்பதோ, காய்தலுற்றுப் பிற வுயிர்மேற் பாயும் கொடிய விலங்கென்பதோ, பெருங் காற்றினால் சுழலும் காற்றாடி என்பதோ, காலன் வடிவோ, இந்திர சால வடிவமோ, என்னுடைய வினையின் வடிவமோ, இன்ன தென்று அறியேன்; இதனை நின் சேவடியில் ஒன்றி நிற்குமாறு அருள் செய்க. எ. று.

     இன்ன தென உணர்ந்தாலன்றி ஒன்றை வாயால் உரைக்கலாகாதாதலால்,. “வாய்கொண் டுரைத்தல் அரிது” என்றும், மாட்டாமை வற்புறுத்தற்கு, “என் செய்கேன் என் செய்கேன்” என அடுக்கியும் கூறுகின்றார். மனம் அமைந்தது இறைவன் திருவடியை ஒன்றி நின்று நினைத்தற்காகும்; “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்” (தனி) என நாவுக்கரசர் நவில்வது காண்க. மனம் அதனைச் செய்யாமையின், “வள்ளல் உன் சேவடிக்கண் மன்னாது“ என்றும், அது செய்வது இது வென விளக்குவாராய், “பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை வாய்ந்து உழலும்” என்றும் இயம்புகிறார். பொறி புலன்களின் வாயிலாக ஆசைமிக்குப் பொருள்கள் மேல் தாவிக் குதித்தோடுதலும் சுழலுதலும் உருளுதலும் செய்தலால் குரங்கோ, திகிரியோ, பந்தோ, விலங்கோ, கறங்கோ எனவும், அறிவை மயக்கித் துன்பமெய்துவித்து இறத்தற்கு ஊக்குதலின், “இந்த்ரசால வடிவோ கர்ம வடிவோ கால வடிவோ” எனவும், தெளிய வுணரமாட்டாமை தோன்ற, “அறிகிலேன்” எனவும் தெரிவிக்கின்றார்.

     இதனால் மனம் இறைவன் திருவடியை ஒன்றி நினையாமல் ஆசை கொண்டு அலைக்கும் திறத்தை விளக்கியவாறாம்.

     (23)