230. என்றும் மாதர்மே லிச்சைவைத் துன்றனை
எண்ணுவேன் துயருற்றால்
கன்று நெஞ்சகக் கள்வனே னன்பினைக்
கருத்திடை யெணில்சால
நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்னருள்
நல்குவை யறிகில்லேன்
துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ்
சோதியே சுகவாழ்வே.
உரை: சூழ்கின்ற பெரிய தவ வொழிக்கினர் தம்மிற் கூடி நின்று பரவும் தணிகைப்பதியில் எழுந்தருளும் ஒளிப் பிழம்பே, திருவருட் சுக வாழ்வு தருபவனே, எக்காலத்தும் மகளிர்பால் வைத்த ஆசையால் உன்னை மறந்து தன்பம் வந்த போதில் நினைக்கும் செயலினால் பழகிய நெஞ்சத்தை அகத்தே கொண்டிருக்கும் கள்வனாகிய யான், நின்பால் கொள்ளும் அன்பைக் கருத்தில் நினைவு கூர்ந்து எண்ணுவேனாயின், அது பொய்யாதலின் என் செய்கை நல்லதன்று; நினது திருவருளை எனக்கு எவ்வாறு நல்குவாய்? தெரியேன், எ. று.
தவ வொழுக்கத்து அடியராயினார், தமது ஒழுக்கம் அல்லவர் உறவால் இழுக்குறாமைப் பொருட்டு எப்பொழுதும் தம்மிற் கூடியிருப்பராதலால் அவர்களைத் “துன்று மாதவர்” என்றும், அவர்கள் வழிபடும் இடமாதலின், “மாதவர் போற்றிடும் தணிகை” என்றும், “பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு” (கந்தபு) எனப்படுதலால், “சோதி” என்றும் கூறுகின்றார். சுகவாழ்வு திருவருளின்ப வாழ்வு. “சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரஞ்சோதியே சுக வாரியே” எனும் தாயுமானவர் கூற்றை இத்தொடர் நினைப்பிப்பது காண்க. மனக்குகையில் எழும் எண்ணங்களில் ஒன்று நினை வெல்லையில் நிற்கும் போது பிறவெல்லாம் மறப் பெல்லையிற் புதைந் தொழிதலின், “என்றும் மாதர்மேல் இச்சை வைத்து உன்றனை” மறந்தேனெனவும், துயர் உறும்போது காம இச்சை வீழ்ந் தொழிதலால், தெளிவு பற்றிய திருவருள் நினைவு மேல் வந்து முருகப் பெருமானை நினைப்பித்தலை யுணர்ந்து, “உன்றனை எண்ணுவேன் துயருற்றால்” என்றும், இவ்வாறு நினைப்பு மறப்புக்களால் பயின்ற நெஞ்சு என்றற்குக் “கன்று நெஞ்” சென்றும், அதனை அகத்தே கொண்டு உலவுதல் விளங்கக் “கள்வனேன்” என்றும் இயம்புகின்றார். ‘மறந்து’ என ஒருசொல் வருவிக்க. கன்றுதல், பயிற்சி மிகுதி யுணர்த்துவது; “கன்றிய கள்வன்” (சிலப்.) என்றாற்போல, பொய் யன்புடையார்க்குத் திருவருள் நல்கப் படாமையால், “எவ்வணம் பொன்னருள் நல்குவை” என்றும் புகல்கின்றார்.
இதனால் மகளிர் மேற் செல்லும் இச்சையால் முருகப் பெருமானை நினையாத போக்கையும், துயர் உண்டாகும் போது அவனை நினைந்து அன்பு செய்யும் போக்கையும் எடுத்துரைத்து முறையிட்டவாறாம். (10)
|