235. தனியேயிங் குழல்கின்ற பாவியேன்
திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
கனியேநின் சேவடியைக் கண்ணாரக்
கண்டுமனம் களிப்பு றேனோ
துணியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம்
முடியாது சுழல்வேன் ஆகில்
இனிஏது செய்வேன்மற் றொருதுணையும்
காணேன்இவ் வேழை யேனே.
உரை: திருத்தணிகை மலையில் கோயில் கொண்டிருக்கின்ற மெய்ஞ் ஞானத்தால் இயன்ற கனி போல்பவனே, துணையாவார் ஒருவரையும் காணாமல் தனித்து நிற்கின்ற ஏழையாகிய நான் இவ்வுலகில் வருந்துகின்ற பாவி யாவேன், நான் நின் செம்மை சான்ற திருவடிகளைக் கண் நிரம்பக் கண்டு மனம் மகிழ்தல் வேண்டும். எவ்வாற்றாலும் வெறுப்பையே உண்டு பண்ணுகின்ற உலக வாழ்க்கையில் பல வகையில் அலைந்து நினைத்த எண்ணம் முடிவடையாது இங்கும் அங்கும் சுழன்று திரிய வேண்டுவதாயின் இனிமேல் யான் யாது செய்வேன், எ. று.
நிலையாக நின்று உதவி செய்ய வல்லதொரு பொருளையும் உடையவன் அல்லேனாதலால் ஏழை ஆயினேன் என்றற்கு, “ஒரு துணையும் காணேன் இவ்வேழையேனே” என்று நிலையாமை அடிப்படையில் தமது சிறுமையை உரைக்கின்றார். துணையாவது ஒன்றும் இல்லாவிடத்துத் தனிமைப் பட்டு வருந்துவது இயல்பாதலால், “தனியே இங்கு உழல்கின்ற பாவியேன்” என்று உரைக்கின்றார். துணை ஒன்றும் இன்றித் தனிமைப்படுதற்குக் காரணம் தாந் தாம் செய்த பாவம் ஆவது பற்றித் தம்மைப் ‘பாவியேன்’ என்றது குறிக்கத் தக்கது. தணிகை அசலம், தணிகாசலம் என்று வந்தது. அசலம் - மலை. ஞானமூர்த்தி யாதலால், “ஞானக் கனியே” என்கின்றார். முருகப் பெருமான் திருவடியைக் கண்டு மகிழ்வதில் பேரார்வம் தோன்றுவது பற்றி, “நின் சேவடியைக் கண்ணாரக் கண்டு மனம் களிப்புறேனோ” என்று சொல்லுகின்றார். உலக வாழ்வில் இனிமை தரும் பொருள்கள் யாவும் சிறிது மிக்கவிடத்து வெறுப்பை விளைவிப்பதால், “துனியே செய்வாழ்வு” என்றும், வெறுப்புற்ற இடத்தில் இருக்க விரும்பாது பிற இடங்களுக்கு உயிரைச் செலுத்துவதால் எண்ணிய எண்ணம் நிறைவேறாது மனம் அலைவது பற்றி, “அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில்” என்றும், அந்நிலையில் மாற்றாகச் செய்து கோடற்கு ஒன்றும் இல்லாமை நினைந்து, “இன ஏது செய்வேன்” என்றும் இயம்புகின்றார். சேவடியைக் கண்டு களிப்புறும் எண்ணம் நிறைவேறாதாயின் அலைந்து திரிந்து சுழன்று வருந்துவேன் என்பது கருத்து.
இதனால், தணிகாசலத்து முருகப் பெருமானது சேவடியைக் கண்டு களிக்கும் விருப்ப மிகுதியை விளம்பியவாறாம். (5)
|