237.

    சிறியேனிப் போதேகித் திருத்தணிகை
        மலைஅமர்ந்த தேவின் பாதம்
    குறியேனோ ஆனந்தக் கூத்தாடி
        அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
    அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்
        பயதவிடுத்திவ் வகில மாயை
    முறியேனோ உடல்புளகம் மூடேனோ
        நன்னெறியை முன்னி யின்றே.

உரை:

     அறிவாற் சிறுமையுடைய யான் இப்போது சென்று திருத்தணிகை மலைமேல் எழுந்தருளும் தேவதேவனாகிய முருகன் திருவடியை மனத்திற் குறிக் கொள்ள வேண்டும்; ஆனந்தக் கூத்தாடி முருகன் அடியார்களின் கூட்டத்துள் சென்று அப்பெருமானது மெய்ம்மையாம் இயல்பை அறிதல் வேண்டும்; அறிந்து யான் எனதென்னும் செருக்கினை விடுத்து இவ்வுலக மாயா மயக்கத்தை ஒழித்தல் வேண்டும்; நன்னெறியை மேற்கொண்டு எய்தும் இன்பத்தால் உடல் புளகிக்க வேண்டும், எ. று.

     இது காறும் தணிகைப் பெருமானுடைய திருவடிகளை மனத்தில் குறிக்கொண்டு நினையாமையை எண்ணி ஏங்குகின்றாராதலால் தம்மைச் ‘சிறியேன்’ என்றும், இப்போதேயேகித் திருத்தணிகை மலை அமர்ந்த “தேவின் பாதம் குறியேனோ” என்றும், குறிக்கொண்டு நினைந்த விடத்து எழுகின்ற மகிழ்ச்சியால் கூத்தாடி மெய்யன்பர்கள் கூட்டத்தைச் சேர்ந்து அவர்களோடு அளவளாவி முருகனது பரமாந்தன்மையை அறிய விழைகின்றராதலால், “ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள் குழாத்துள் சென்று பொருள் நிலையை அறியேனோ” என்றும், முருகனது பரம் பொருளாம் தன்மையை அறிந்தவிடத்து அதனை அறியாதவாறு தடுத்து நிற்கும் யான் எனது என்னும் செருக்குக் கெட்டழிந்து அதற்கு மூல காரணமாகிய உலக மாயை விலகி யொழிதலின், “பொருள் நிலையை அறிந்து எனதென்பதை விடுத்து இவ்வகில மாயை முறியேனோ” என்றும், மாயை இருள் நீங்கிய விடத்து உண்மை ஞான நன்னெறி புலனாதலின் ஞான இன்பம் தலைப்பட, உடல் புளகம் போர்த்தலால், “நன்னெறியை முன்னி யின்று உடல் புளகம் மூடேனோ” என்றும், தமது உள்ளத்து எழுகின்ற பேரார்வத்தை வெளிப்படுத்துகின்றார்.

     இதனால் முருகனது அடியாரோடு கூடி அவனது பரமாம் தன்மையை உணர்ந்து செருக்கு அகன்று உலக மாயையில் நீங்கி உவகை இருந்து உடல் புளகிக்க வேண்டுமெனும் விருப்பம் தெரிவித்தவாறு.

     (7)