24. கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி
கற்குநெறி தேர்ந்து கல்லேன்
கனிவு கொண்டுனது திருவடியை யொருகனவிலும்
கருதிலே னல்ல னல்லேன்
குற்றமே செய்வதென் குணமாகு மப்பெருங்
குற்றமெல் லாங்குணமெனக்
கொள்ளுவது நின்னருட் குணமாகும் என்னில் என்
குறைதவிர்த் தருள் புரிகுவாய்
பெற்றமேல் வருமொரு பெருந்தகை யினருளுருப்
பெற்றெழுந் தோங்கு சுடரே
பிரண வாகார சின்மய விமல சொரூபமே
பேதமில் பரப் பிரமமே
தற்றகைய சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: தன்னளவில் அழகமைந்த சென்னைக் கந்த கோட்டத்துள் சிறக்கும் கோயிலில் எழுந்தருளும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளில் சைவமணியாகிய சண்முகங்களை யுடைய தெய்வ மணியே, எருதின் மேல் இவர்ந்து வரும் ஒப்பற்ற பெருமானான சிவனுடைய அருளுருப் பெற்று விளங்கும் சுடரே, ஓங்கார வடிவாய் ஞான மயமாய் மலமில்லாத தூய்மை யுருவமே, மேலாய பிரமப் பொருளே, கல்வியைக் கற்கும் நெறி யறிந்து கற்றிலேனாதலால், கற்றுணர்ந்த மேன் மக்களோடு கூடி நிற்பதில்லேன்; உள்ளத்தில் உருக்கம் கொண்டு உனது திருவடியைக் கனவிலும் நினைத்ததில்லை; நல்ல பண்புடையவனும் அல்ல; குற்றம் செய்வதே எனது குணமாகும்; அப்பெரிய குற்றங்களெல்லாவற்றையும் குணமாகக் கொண்டருளுவது நின்னுடைய அருட் குணமாம் என்பதால் என்னுடைய குறைகளைப் போக்கியருள வேண்டுகிறேன், எ. று.
பிற நகரங்களோடு ஒப்புறலின்றியுயர்ந்து தன்னிற்றானே அழகமைந்தது என்றற்குத் “தற்றகைய சென்னை” என்று சிறப்பிக்கின்றார். “தற்றகைய சென்னை” என்பது “தற்றரும தருமி” (சருவஞானோத்தரம்) என்றாற் போல்வது. எருதேறும் பெருமானாதலால் சிவனைப் “பெற்ற மேல் வரும் ஒரு பெருந்தகை” என்கின்றார். “பெற்ற மூர்ந்த பெம்மான்” (பிரம) என்று திருஞான சம்பந்தர் புகழ்வது காண்க. சிவனது நெற்றிக் கண்ணினின்றும் சுடர்ப் பொறியாய்த் தோன்றி அருட் சத்தியாகிய உமையம்மையால் அறுமுகக் கடவுளாய் உருக் கொண்டமை காரணமாகப், “பெருந்தகையின் அருளுருப் பெற்று எழுந்தோங்கு சுடரே” என்று சண்முகக் கடவுளைக் கூறுகின்றார். சிவபரம் பொருள் ஓங்கார வடிவும் பொருளுமாதலால், அவனது அருளுருவாகிய முருகனும் ஓங்கார வடிவினனாதலால், “பிரணவாகார” எனவும், ஞானத் திரளாய் நிற்பது தோன்றச் “சின்மய” எனவும், ஏனைச் செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் போல மலமுடைய னல்லனாதலால், “விமல சொரூபமே” எனவும் சிறப்பித்துரைக்கின்றார். பிரணவம் - ஓங்காரம். “ஊனங்கத் துயிர்ப்பாய் உலகெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றான்” (வலிவலம்) என நம்பியாரூரர் நவில்வர். மக்கள், முனிவர், தேவர் முதலிய உயர்திணைப் பொருள்கள் அனைத்தினும் பெரிய பொருளாகிய சிவ மூர்த்தத்தினும் மேலாயது பரப்பிரமம்; எங்கும் எப்பொருளிலும் கலந்து நிற்பதோடு எல்லாவற்றிற்கும் மேலாகவும் இருப்பது பற்றிப் “பேதமில் பரப்பிரமம்” என வுரைக்கிறார். நினைத்தல் சொல்லுதல் முதலிய எல்லாச் செயற்கும் முறை யுண்மையின், அதனைக் கை நெகிழ்த்துக் கற்றமை தோன்றக் “கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்” என்றும், அதனால் கற்றுணர்ந்த பெரியோருடன் பழகும் முறை தெரியா தொழிந்தமை விளங்கக் “கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்” என்றும் இயம்புகிறார். “நினையு மா நினையே”, “விளம்புமா விளம்பே” எனத் திருமாளிகைத் தேவர் கூறுவதால் முறையுண்மை தெளியப்படும். உலகப் படைப்பே முறைமைப்பட்டது என்பதை இன்றை விஞ்ஞான வளர்ச்சி காட்டுவதாகும். திருநாவுக்கரசரும் “முறைமையால் எல்லாம் படைக்கின்றானே” (சோற்றுத்) என்பது காண்க. உள்ளத்துக்கு உருக்க முடைமை நலமாகும்; அஃது என்பால் இல்லை என்பாராய்க், “கனிவுகொண்டு உனது திருவடியை ஒருகனவிலும் கருதிலேன்” அதனால் “நல்ல னல்லேன்” என இசைக்கின்றார். குற்றமே யில்லாதவர் உலகத்தில் ஒருவரும் இலராதலால் குற்றமும் என்பால் உளதென்பார், “குற்றமே செய்வதென் குணமாகும்” என்றும், குற்றத்தைக் குணமாகக் கொண்டு பொறுத்தாள்வது அருளாளர் செயல் என்றற்கு, “அப்பெருங் குற்றமெல்லாம் குணமெனக் கொள்வது நின் அருட்குணம்” என்றும், அதனால் என் குற்றம் பொறுத்துக் குறை நீக்கி அருள் செய்க என்பாராய், “என் குறை தவிர்த்தருள் புரிகுவாய்” என்றும் வேண்டுகிறார்.
இதனால், முறையற்ற கல்வியும் கனிவில்லாத மனமும் உடைமையால் என் குற்றம் நீக்கிக் குறை தவிர்த் தருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (24)
|