17.
நெஞ்சொடு புலத்தல்
நெஞ்சொடு புலத்தல் என்பது ஈண்டுப்
புலப்பதற்குரிய செயல்கள் பல வுண்டாகக் கண்டு நொந்து
சினந்து கொள்ளுவதாகும். சினம் உறுவதால் நெஞ்சு தெளிந்து
தனது நல்வழிப்படும் என்ற நன்னோக்கம் உள்ளுறுதலால்
வெறுத்தல் கடிதல் என்னாமல், புலத்தல் என்று
கூறுகின்றார். காதலின்பம் மிகுதற் பொருட்டுக்
காதலிரிடையே உண்டாகும் அன்புப் பூசலைப் புலத்தல்
என்றும் புலவி யென்றும் சான்றோர் உரைப்பர்
உப்பமைந்தற்றால் புலவி எனத் திருவள்ளுவர்
கூறுகின்றார். நெஞ்சென்பது உணர்வுடையதொரு பொருள்
போலவும், போக்குவரவு கட்கமைந்த உறுப்புடையது போலவும்
நிறுத்தி உரையாடுவது செய்யுள் மரபு. இதனை, ஒட்டிய
உறுப்புடையது போல் உணர்வுடையது போல், மறுத்துரைப்பது
போல்நெஞ்சொடு புணர்த்தும் (பொரு. பொருளியல்-2)
எனத் தொல்காப்பியனார் உரைப்பது காண்க.
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
241. வாவா என்ன அருள்தணிகை
மருந்தை யென்கண் மாமணியைப்
பூவாய் நறவை மறந்தவநாள்
போக்கின் றதுவும் போதாமல்
மூவா முதலின் அருட்கேலா
மூட நினைவும் இன்றெண்ணி
ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய்
அந்தோ நீதான் ஆவாயோ.
உரை: மெய்யன்பராவாரை வருக வருக என்று அருள் புரியும் திருத் தணிகையில் உள்ள மருந்து போல்பவனும், என் கண்ணிலுள்ள மாமணி போல்பவனும், பூவிடத்து ஊறுகின்ற தேன் போல்பவனுமாகிய முருகப் பெருமானை மறந்து, நாட்களை வீணே போக்குவதோடு இல்லாமல், என்றும் இளையவனாய் முழு முதற் பொருளாய் உள்ள அப்பெருமானது திருவருளைப் பெறுதற்குப் பொருந்தாத மூட நினைவுகளை இப்பொழுது பல பட எண்ணி என்னைக் கெடுத்தொழித்தாய், நெஞ்சே நீ எனக்கு நன்மை செய்குவை ஆவாயோ? ஐயோ! எ. று.
உண்மை அன்புடைய அடியவர்க்கு வரையாது அருள் வழங்கும் முருகப் பெருமான் வீற்றிருக்கும் மலையாதல் தோன்ற, “வாவா என்ன அருள் தணிகை” என்று சிறப்பிக்கின்றார். பிறவிப் பிணிக்கு மருந்தாய் விளங்குதலால் அப்பெருமானை, “மருந்து” என்றும், கண்ணில் திகழும் கருமணி போல் அன்பர்க்கு ஞானக்கண்ணாய்த் திகழ்தலால், “என் கண் மாமணி” என்றும், பூவிடத்துச் சுரக்கும் தேன்போல மனத் தாமரையின் கண் அருளாகிய தேனைச் சுரப்பித்தலின், “பூவாய் நறவை” என்றும் புகழ்ந்து, மறத்தற்குக் கூடாத அப்பெருமானை மறத்தலைச் செய்து காலத்தை வீண் போக்குவது கண்டு நெஞ்சொடு புலக்கின்றா ராதலால், “மறந்து அவநாள் போக்கின்றது” என்றும் கூறுகின்றார். போக்குகின்றது, போக்கின்றது என வந்தது. அங்ஙனம் மறந்தது மன்றித் திருவருட் பேற்றுக்குப் பொருந்தாத மூட நினைவுகளை எண்ணிக் குற்றப்படுதலின் சினமுற்று, “அதுவும் போதாமல் மூவா முதலின் அருட் கேலாமூட நினவும் இன்று எண்ணி எனைக் கெடுத்தாய்” என்று உரைக்கின்றார். குற்றத்தால் விளையும் கேடு நினைந்த போது நெஞ்சின் செயலுக்கு இரங்கி, “ஆவா நெஞ்சே” எனவும், அது மயக்கத்தைச் செய்யும் மாயையின் காரியப் பொருளாதலை எண்ணி, “அந்தோ நீ தான் ஆவாயோ” எனவும் செப்புகின்றார்.
இதனால் நெஞ்சமானது பல மூட நினைவுகளை நினைத்துத் தன்னைக் கெடுத்தமைக்கு வருந்திப் புலந்துரைத்தவாறாம். (1)
|