243. வாழும் படிநல் லருள்புரியும்
மருவுந் தணிகை மலைத்தேனைச்
சூழும் கலப மயிலரசைத்
துதியாப் பவமும் போதாமல்
வீழும் கொடியர் தமக்கன்றி
மேவா நினைவும் மேவியின்று
தாழும் படிஎன் றனையலைத்தாய்
சவலை மனம்நீ சாகாயோ.
உரை: மக்கள் உயர்ந்த வாழ்வு வாழ்தற்கு நல்லருள் வழங்கும் வளம் பொருந்திய தணிகை மலையில் வீற்றிருக்கும் தேன் போல இனியவனும் வட்டமாக விரியும் தோகையையுடைய மயில் மேல் இவர்ந்து வரும் அருள் அரசனுமாகிய முருகப் பெருமானைத் துதிக்காத பிறப்படுத்ததும் அல்லாமல் தீநெறியில் வீழ்கின்ற கொடியவர் பொருட்டுப் பொருத்தமற்ற நினைவு கொண்டு இன்று என்னைக் கீழ் நிலையில் விழுந்தொழியும் படி வருத்துகின்றாய். சவலைத் தன்மையுடைய மனமே! நீ சாக மாட்டாயா! என்று வெகுளுகின்றார், எ. று.
சவலைத் தன்மை - பயன்படாத் தன்மை. தன்னை வணங்குவாரக்கு உயர்ந்த வாழ்வு அருளுவது பற்றி, “வாழும்படி நல்லருள் புரியும் தணிகைமலை” என்றும், மலைவளம் சிறந்திருப்பது பற்றி, “மருவுந் தணிகை” என்றும் புகழ்கின்றார். மலையிடத்தே இருந்து திருவருள் இன்பமாகிய தேனை நல்குவதால் முருகனை, “மலைத்தேன்” எனவும், வட்டமாக விரிந்து தோன்றும் தோகையை யுடைய மயில் மேலிருந்து காட்சி தருவதால், “சூழும் கலப மயில் அரசு” எனவும் சொல்லி, அப்பெருமானை நாளும் பரவித் துதிப்பது பிறவிப் பணியாகவும், அது செய்யாத பிறவி எடுத்ததற்கு வருந்தித் “துதியாப் பவம்” பெற்றுள்ளாய் எனவும் வெறுக்கின்றார். தீநெறிச் செல்லும் கொடியவர் துன்பக் குழியில் வீழ்வராதலின் அவர்களை, “வீழும் கொடியர்” என்று இகழ்ந்து, அவர்களை நினைப்பதைத் தீதாகவும், பொருந்தா நினைவாதல் பற்றி, மேவா நினைவு மேவி” என்றும், அச்செயலால் கீழ்மைக்கண் தன்னை ஆழ்த்துவது பற்றி, “இன்று தாழும்படி என்னை அலைத்தாய்” என்றும், “நீ சாகாயோ” என்றும் வைதுரைக்கின்றார்.
இதனால் முருகனைத் துதியாத பிறப்பை எடுத்துக் கொண்டதே யன்றிக் கொடியாரைப் பற்றி நினைந்து மனம் தன்னைக் கெடுப்பதற்கும் புலந்தவாறாம். (3)
|