245. தேனும் கடமும் திகழ்தணிகைத்
தேவை நினையாய் தீநரகம்
மானும் நடையில் உழல்கின்றாய்
மனமே உன்றன் வஞ்சகத்தால்
நானும் இழந்தேன் பெருவாழ்வை
நாய்போல் அலைந்திங் கவமேநீ
தானும் இழந்தாய் என்னேஉன்
தன்மை இழிவாம் தன்மையதே.
உரை: தேன் வளமும், பால் வளமும் நிறைந்துள்ள தணிகை மலையில் எழுந்தருளும் தேவதேவனாகிய முருகப் பெருமானை நினையாமல் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் நரகம் புகுவோர் போன்ற இயல்பு கண்டு வருந்துகின்ற மனமே! உனது வஞ்சகச் செயலால் நானும் அருள் மிக்க பெருவாழ்வை இழந்தேனாக, நீயும் நாய் போல் எங்கும் திரிந்து வீணே அவ்வாழ்வை இழந்து விட்டாய், இதனை என்னென்பது? உனது தன்மை இழிவு தரும் தன்மையாகும், எ. று.
கடம் - கடமையின் பால். கடமை, கடமா எனவும் வழங்கும். அதன் பால் பெறற்கருமையும் மருந்துக்குப் பெரும்பயனும் வாய்ந்தது. புதிது கறந்து காய்ச்சிய, ஆவின்பாலைக் கடமென வழங்குவதும் உண்டு. தேனும் பாலும் வளமிக்கிருக்குமிடமாதல் விளங்கத், “தேனும் கடமும் திகழ் தணிகை” என்று சிறப்பிக்கின்றார். எரிகனலும் நரகம் புகும் கொடியவர் போலப் பொல்லாதவற்றை எண்ணும் இயல்பு கொண்டமை பற்றித் “தீ நரகம் மானும் நடையில் உழல்கின்றாய் மனமே” என்றும், மனத்தின் பொல்லாங்கினால் திருவருள் இன்ப வாழ்வு இழக்கப்படுதலால், “உன்றன் வஞ்சகத்தால் நானும் பெருவாழ்வை இழந்தேன்” என்றும், பயனின்றித் தெருவெல்லாம் திரிந்து அலைந்து காலத்தை வீண் போக்குமாற்றால் துன்புறும் நாய் போல மனமும் பயனில்லாத எண்ணங்களால் நலமொன்றுமின்றி ஒழிதலால், “நாய் போல் அலைந்திங்கு அவமே நீதானும் இழந்தாய்” என்றும், அது பற்றி இரக்கம் உறுகின்றாராதலின், “என்னே” என்றும், இது மனமாகிய உனக்கு இயல்பு என்றால் அதனால் உனக்குத் தாழ்வே உண்டாகும் என்பாராய், “உன் தன்மை இழிவாம் தன்மையதே” என்றும் கடிந்துரைக்கின்றார்.
இதனால் மனத்தில் முருகப் பெருமானை நினையாத தீது கண்டு அதனைச் சினந்து கொண்டவாறு. (5)
|