246.

    தன்னால் உலகை நடத்தும்அருட்
        சாமி தணிகை சாராமல்
    பொன்னால் மண்ணால் பூவையரால்
        புலம்பி வருந்தும் புன்னெஞ்சே
    உன்னால் என்றன் உயர்விழந்தேன்
        உற்றார் இழந்தேன் உன்செயலைச்
    சொன்னால் நகைப்பர் எனைவிட்டும்
        தொலையாய் இங்கு நிலையாயே.

உரை:

     தனது திருவருளால் உலக வாழ்வை இயக்குகின்ற முருகப் பெருமானுடைய தணிகைமலை அடைந்து வழிபட நினையாமல் பொன், மண், பெண் என்ற மூன்றன் ஆசைகளால் தனிமையுற்று வருந்துகின்ற புன்மைத் தன்மையை யுடைய நெஞ்சமே! உன் செயலால் என் பிறப்பு உயர்வையும் உற்றார் தொடர்பையும் இழந்து ஒழிந்தேன்; உன் செயல்களைப் பிறர் எவர்க்கேனும் சொன்னால் அவர்கள் சிரிப்பர்; இனி நீ என் பால் நில்லாமல் என்னை விட்டுத் தொலைந்தொழிக, எ. று.

     உலகைப் படைத்து இயக்கி உயிர்களை வாழ்விக்கும் முதல் திருவருள் முதல்வன் ஆதலால் தணிகை முருகக்கடவுளைத் “தன்னால் உலகை நடத்தும் அருட் சாமி” எனவும், அப்பெருமான் எழுந்தருளும் தணிகைப் பதியைச்சென்று வழிபடாமல் வேறுபட் டொழுகுவது பற்றிச் “சாமி தணிகை சாராமல்” எனவும் உரைக்கின்றார். பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசைகளால் அலைப்புண்டு அருள் நெறியினின்று விலகித் தனிமை யுற்றுத் துன்புறும் நிலைமை கண்டு, “பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புன்னெஞ்சே” என இகழ்ந்து நெஞ்சினது அச்செய்கையால் தான் எய்திய இழப்பினை எடுத்துரைக்க லுற்று, “உன்னால் என்றன் உயிர் விழந்தேன் உற்றார் இழந்தேன்” எனவும், இதனையும் இதற்கு ஏதுவாகிய உன் செயல் வகைகளையும் பிறர்க்கு சொல்லி ஆறுதல் பெறலாம் எனின், கேட்பவர் எள்ளி நகைப்பர் என்பாராய், “உன் செயலைச் சொன்னால் நகைப்பர்” என்றும் மனமாகிய கரணம் நீக்கரும் பொருளாய் உடலின் நீங்குங்காறும் உள்ளதாகலின், “எனைவிட்டும் தொலையாய்” எனவும், வெறுப்பு மிகுதி தோன்ற இங்கே என் முன் நில்லாதே என்பார், “இங்கு நிலையாயே” எனவும் புகல்கின்றார்.

     இதனால் தணிகை முருகனை நினையாமல் பொன், மண், பெண் முதலியவற்றை நினைந்து புன்மை யுற்றதை எடுத்தோதிப்புலந்தவாறு.

     (6)