247.

    நிலைக்கும் தணிகை என்அரசை
        நீயும் நினையாய் நினைப்பதையும்
    கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம்
        கண்டாய் பலன்என் கண்டாயே
    முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே
        முயங்கும் மூட முழுநெஞ்சே
    அலைக்கும் கொடிய விடம்நீஎன்
        றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.

உரை:

     முழுத்த மடமை பொருந்திய நெஞ்சமே, நிலைத்த புகழ் கொண்ட தணிகையில் எழுந்தருளும் எனக்கு அரசனாகிய முருகப் பெருமானை நீ தான் நினைப்பதில்லை யாயினும் நினைக்கின்ற என் நினைவையும் அது செய்ய வொட்டாமல் கலைத்துக் கெடுக்கும் செயல் மேற்கொண்டு என் உள்ளத்தைக் கலக்குகின்றாய்; அதனால் நீ பெற்ற பயன் யாது? மகளிர் கொங்கையையும் ஒப்பனைக் கலையையும் கண்டு ஆசையுற்று வீணே அவர்களைக் காதலித்தலையும் நீ துன்பம் தந்து வருத்தும் கொடிய விடமாவாய் என்பதை இப்போது அறிந்தது முன்பு அறியாது போயினேன், எ. று.

     சலியாத நிலைமையும் நிலைத்த புகழும் உடையதாகலின், “நிலைக்கும் தணிகை” எனவும், அதன் முடி மேல் எழுந்தருளுளி அருளரசு செய்தலால், “அரசு” எனவும் இயம்புகின்றார். மிக்க மடமை யுடையவனை, “முழு மகன்” என்பது போல மடமை நிறைந்த மனத்தை, “மூட முழு நெஞ்சே” என்கின்றார். “மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார்” (சிலப்) என்று இளங்கோவடிகள் இசைப்பது காண்க. முருகக் கடவுளை நீ தான் நினைந்து போற்றாவிடினும், நினைப்பாரை நினையாவாறு கெடுக்காமலிருக்கலாம் என்பார், “நீயும் நினையாய்” ஒன்றும், நினைப்பதையும் கலைக்கும் தொழில் கொண்”டாய் என்றும், அதனால் எனது உள்ளம் ஒருமை யிழந்து குழம்பி விட்டது என்பாராய், “எனைக் கலக்கங் கண்டாய்” என்றும், அச்செயலால் நாம் ஒரு பயனும் பெற்றோமில்லையே” என்றற்குப் “பலன் என் கண்டாய்” என்றும் கூறுகின்றார். “நல்லது செய்தலாற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் நல்லாற்றுப்படும் நெறியுமா ரதுவே” (புறம்) எனச் சான்றோர் உரைப்பது காண்க. முருகப் பெருமான் திருவருளை நினையாமல் மகளிர் உறுப்புக்களையும் ஒப்பனைகளையும் நினைந்து ஆசை கொண்டு அவர்களைக் கூடி யொழுகி வாழ்வை வீணாக்கிக் கொண்டதை எடுத்துரைத்து ஏசுகின்றாராதலால், “முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் முழு மூட நெஞ்சமே” எனவும், உண்டார் உடம்பைக் குளிர்வித்து உயிரைக் குடிப்பது பற்றி, “அலைக்கும் விடம்” எனவும், நீ விடமாவாய் என்பதை முன்பே அறிந்திருந்தால் உன்னை ஒடுக்கி யிருப்பேன்; இப்போது தெரிந்து வருந்துகிறேன் என்னும் கருத்தால், “விடம் நீ யென்று அறிந்தேன் முன்னம் அறிந்திலனே” எனவும் நொந்து பேசுகின்றார்.

     இதனால் நெஞ்சின் செயற் கொடுமையை விதந்து விடமென வெறுத்துப் பேசியவாறாம்.

     (7)