248. இலதை நினைப்பாய் பித்தர்கள்போல்
ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
குலதெய் வமுமாய்க் கோவாய்சற்
குருவாய் நின்ற குகனருளே
நலதென் றறியாய் யான்செய்த
நன்றி மறந்தாய் நாணாதென்
வலதை யழித்தாய் வலதொடுநீ
வாழ்வாய் கொல்லோ வன்னெஞ்சே.
உரை: கொடிய நெஞ்சமே, இல்லாதவற்றையும் பொல்லாதவற்றையும் நினைந்து பித்துக் கொண்டவரைப் போல நீ ஏங்கி நிற்கின்றாயே யன்றித் தணிகைப் பதியில் எனக்குக் குலதெய்வமாய், தலைவனாய், மெய்ம்மையாசிரியனாய் நின்றருளும் குகப்பெருமானாகிய முருகனது திருவருட் செல்வமே நல்லதென்று அறியாயாயினை; உனக்கு யான் செய்த நன்றியை மறந்தாய்; நாணம் சிறிதுமின்றி என் வன்மையைச் சிதைத்து வெற்றியுடன் வாழ்கின்றாய்; உன் வாழ்வு என்னாகும்? எ. று.
உலகில் இல்லாதவற்றை நினைக்கும் போது பொல்லாத நினைவுகள் உடன் தோன்று மாதலால், “இலதை நினைப்பாய்” என்னும் போது பொல்லாததைத் தொக்கு நிற்ப உரைக்கின்றார். இரண்டாலும் பொருட் பயன் ஒன்றும் எய்தாமல் ஏக்கமே தோன்றி அறிவை மயக்குவது பற்றிப், “பித்தர்கள் போல் ஏங்கா நிற்பாய்” என மொழிகின்றார். குல முதற் கடவுள் என்றற்குக் “குல தெய்வமாய்” என்றும், வாழ் முதலாதல் விளங்கக் “கோவாய்” என்றும், சிவஞான முணர்த்தும் ஞானமூர்த்தி யாகலின் “சற்குருவாய்” என்றும், மெய்யன்பர்கள் மனமாகிய குகையின் கண் உறைவது தோன்ற, “நின்ற குகன்” என்றும் குறிக்கின்றார். சிறு மானிடச் செல்வர் அருளும், சிறு தெய்வங்களின் அருளும் பெரிதென எண்ணுகின்ற தன்றிக் குகனாகிய முருகன் திருவருளே நல்லதென அறியா தொழிந்தமை பற்றிக் “குகன் அருளே நலது என்று அறியாய்” என்றும், உடல் கருவி கரணங்களைப் படைத்தளித்து வாழ்வாங்கு வாழ்ந்து திருவருட் பெருவாழ்வு பெறச் செய்த பெருமான் முருகன் என்ற ஞான வுரையை மறந்தாய் என்பாராய், “யான் செய்த நன்றி மறந்தாய்” என்றும், அம்மட்டில் நில்லாமல் தவறு செய்ததற்கு நாணி மனம் சுருங்காமல் எனது அறிவின் திண்மையையும் சிதைத்து விட்டாய் என்று வருந்தி, “நாணாது என் வலதை அழித்தாய்” என்றும் வெறுத்துரைக்கின்றார். வலம் - அறிவின் திண்மை. வலத்தை யென்பது எதுகை நோக்கி “வலதை” என வந்தது. வலதொடு-வலத்தொடு. ஈண்டு வலம் வெற்றி மேற்று. நன்னெறி கொள்ளாமல் வேண்டாச் செயல்களில் வலியுற்று நிற்றலால், “வன்னெஞ்சே” எனவும், அதனால் வீழ்ச்சி யுறுவது தோன்ற, “நீ வாழ்வாய் கொல்லோ” எனவும் இயம்புகின்றார்.
இதனால் குகன் அருள் நல்லதென்று அறிந்தொழுகாமல் கெடுவது பற்றி நெஞ்சினை வெகுண்டுரைத்தவாறு. (8)
|