25.

    பாய்ப்பட்ட புலியன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
        பாழ்ப்பட்ட மனையில் நெடுநாள்
        பண்பட்ட கழுநீரும் விண்பட்ட வின்னமுது
        பட்ட பாடாகு மன்றிப்
    போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடுநற்
        பூண்பட்ட பாடு தவிடும்
        புண்பட்ட வுமியுமுயர் பொன்பட்ட பாடவர்கள்
        போக மொரு போக மாமோ
    ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்னடிக்
        காட்பட்ட பெரு வாழ்விலே
        அருள்பட்ட நெறியுமெய்ப் பொருள்பட்ட நிலையுமுற
        அமர் போகமே போகமாம்
    தாய்ப்பட்ட சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     தாய்மைப் பண்புடையார் வாழும் சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்த வேட் பெருமானே, தண்ணிய ஒளி பொருந்திய தூய மணிகளிற் சைவமணியாகிய ஆறு முகங்களை யுடைய தெய்வ மணியே, பாய்தலையுடைய புலி போலவும் நாய் போலவும் உள்ள கீழ் மக்களின் பாழ்மனைகளில் நெடுநாள் சேர்த்து வைத்திருந்த புளிங்காடிக்குப் படும்பாடு விண்ணவர்கள் கடலமுது பெறுதற்குப் பட்ட பாட்டினும் மிக்கதாகும்; அதுவுமன்றி மணிப்புல்லுக்கும் பூவுக்கும் அவர்கள் படும்பாடு நல்லதொரு பூணாரத்துக்குப் படும்பாட்டினும் மிக்குளது; தவிட்டுக்காகவும் வெறும் உமிக்காகவும் படும் பாடு உயர்ந்த பொன்னைப் பெறுதற்குப் படும்பாடாக வுளது; இவ்வாறு பெரும்பாடுபட்டு அவர்கள் நுகரும் போகமும் ஒரு போகம் எனத் தக்கதாமோ? அறிவால் ஆயப்படும் வேத முடிவுக்கும் அப்பாற்பட்ட நின் திருவடிக்கு ஆட்பட் டொழுகும் பெருவாழ்வின்கண் திருவருள் வாய்ந்த நெறியும் மெய்ப்பொருளை யுணர்ந்தின்புறும் நிலையும் பொருந்த அமைந்த போக மன்றோ போகமாவது, எ. று.

     அடைந்தாரைத் தாய் போல் தலையளிக்கும் பண்புடைச் செல்வர் வாழ்வது பற்றித் “தாய்ப்பட்ட சென்னை” என்று சிறப்பிக்கின்றார். பாயும் புலியையும் கடிக்கும் நாயையும் கூறியது கயமைப் பண்புடைய செல்வர்களால் படும் துன்பத்தைத் தோற்றுவித்தற்கு. அவர்கள் தம்முடைய மனையில் சேர்த்து வைத்திருக்கும் புளிங்காடிக்காக அவர் பட்ட பாட்டை நினையும் போது தேவர்கள் அமுதம் வேண்டிக் கடலைக் கடைதற்குப் பட்ட பாட்டை எடுத்துரைக்கின்றார். கழுநீர் - சோறு வடித்த நீர். அரிசி வெந்து சோறாகுங்கால் அதனிடத்துப் படிந்த தவிடு முதலிய அழுக்கனைத்தும் கழுவப்பட்டு நீராய் வடிக்கப்படுவதால் அந்நீரைக் கழுநீர் எனவும், பன்னாள் சேர்க்கப்படுமாறு புலப்பட “நெடுநாள் பண்பட்ட கழுநீர்” எனவும் குறிக்கின்றார். வயற்காட்டுப் புல்லுக்கும் தோட்டத்துப் பூவுக்கும் படும்பாடு நல்ல தொரு பூணாரம் வாங்குதற்குப்படும் பாடளவு அக்கயவர்கள் படுகின்றார்கள். அணிபூ-அழகியபூ; அணிகின்ற பூவுமாம். தவிட்டுக்கும் உமிக்கும் அவர்கள் ஊரெங்கும் திரிந்து படும்பாடு பொன்னை மாற்றுயர்தற் பொருட்டுப் பன்முறையும் நெருப்பிற் காய்ச்சி யடித்துப் படுத்தும் பாடு போல்வதாம் என்றற்குப் “பொன்பட்ட பாடு” என வுரைக்கின்றார். இத்துணை யரும்பாடு பட்டுத் தேடிப் பெறும் செல்வப் போகம் பெருந் துன்ப நுகர்ச்சியாக இருப்பதால், “அவர்கள் போகம் ஒரு போக மாமோ” என்று இகழ்கின்றார். ஆய்தல்- ஆராய்தல். வேதாந்தமாகிய உபநிடதங்கள் அறிஞரால் ஆராயப்படுதலால், “ஆய்ப்பட்ட மறைமுடி” யெனவும், அவற்றாலும் தெளியக் காணப்படாமை பற்றி, “மறைமுடிச் சேய்ப்பட்ட நின்னடி” எனவும் சிறப்பிக்கின்றார். திருவடிக் காட்பட்டொழுகும் வாழ்விற் பெறும் போகத்துக்குரிய நெறியும் பொருளும் இவை என்பார், “அருள்பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும்” என விளக்கி, இவற்றாற் பெறலாகும் போகம் இது வெனற்கு “உற அமர் போகமே போகமாம்” என்று புகழ்கின்றார்.

     இதனாற் கயமைப் பண்புடைய செல்வர் பெறும் போகம் போகமாகாது; திருவடிக் காட் பட்டொழுகும் வாழ்விற் பெறும் போகமே சிவ போகம் எனத் தெரிவித்தவாறாம்.

     (25)