250.

    கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக்
        கோவை நினையா தெனைநரகில்
    தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய்
        சகத்தின் மடவார் தம்மயலாம்
    கள்ளுண் டற்கோ வெறிகொண்டாய்
        கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
    எள்ளும் படிவந் தலைக்கின்றாய்
        எனக்கென் றெங்கே யிருந்தாயே.

உரை:

     எழில் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த தணிகைமலை முருகப் பெருமானைச் சிந்திக்க விடாமல் என்னை நரகத்தில் வீழ்த்தும் செயலை மேற்கொண்டு விட்டாய்; உலகில் மகளிரால் விளையும் காம மயக்க மென்னும் கட்குடியில் அழுந்துதற்கே வெறி கொண்டிருக்கின்றாய்; அதனால் என் மனவொருமையைக் கலைத்து விடுகிறாய்; உலக வாழ்வு தோற்றுவிக்கும் ஆசையைத் துறந்தவர்கள் கண்டு இகழும்படி என்பால் வந்து வருத்துகின்றாய்; நெஞ்சமே, எனக்கென்று எங்கிருந்து தோன்றினாயோ, என் செய்வேன்! எ. று.

     பொழில்கள் யாவும் இயற்கை யழகு கொண்டவை யாதலால் “கொள்ளும்” என்றதற்கு எழில் என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. பலவேறு தீய நினைவுகளைத் தோற்றுவித்து அவற்றின் பின் விளைவாகும் நரக வேதனையை எய்துவிப்பது பற்றித் “தணிகை மலைக் கோவை நினையாது எனை நரகில் தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய்” என்று இசைக்கின்றார். ஓகாரம், தெரிநிலை. தலைப்படல், மேற்கோடல்; தொடங்குதலுமாம். நரகம் புகுவதை விலக்குவது முருகப் பெருமானை வழி பட்டொழுகும் சிந்தனை என அறிக. சகம் - நில வுலகம் மகளிரால் விளையும் காம மயக்கம், ஈண்டு மயல் எனப்படுகிறது. உண்டாரை மேன்மேலும் உண்டற்கு விருப்புறுவிக்கும் கள் போலக் காம மயக்கமும் விடா வேட்கை விளைவிப்பது பற்றி, “மடவார் தம் மயலாம் கள்” என வுரைக்கின்றார். திருவள்ளுவரும் காமத்தையும் கள்ளையும் ஒப்ப வைத்துப் பல குறப்பாக்களில் கூறுவது காண்க. வெறி - மிகு வேட்கை; வேட்கை யுணர்வின் செறிவு எனினும் அமையும். “விறப்பும் உறப்பும் வெறிப்பும் செறிவே” (சொல்.உரி) என்பது தொல்காப்பியம். இச்சை வெறியால் ஒருமை நிலை சிதறி விடுவது பற்றிக் “கலைத்தாய் என்னை” எனவும், ஆசைச்சூழலின் தொடர்பறத் துறந்த பெருமக்களைக் “கடந்தோர்” எனவும், அவர்கள் காண்பரேல் எள்ளி யிகழ்ந்து தம்பால் நெருங்க விடா ரென்ற அச்சத்தால், “கடந்தோர்கள் எள்ளும்படி வந்து அலைக்கின்றாய்” எனவும், இவ்வாறு தன் அறிவு வழி நில்லாது அதனைத் தன் வயப்படுத்தித் துயர்க்குள்ளாவது தேர்ந்து வெறுப்பு மிகுந்து, இந் நெஞ்சத்தின் தொடர்பு எங்கே யிருந்து எவ்வண்ணம் தமக்கென்று வந்ததோ எனப் புலக்குமாறு விளங்க, “எனக்கென்று எங்கே யிருந்தாயோ” எனவும் இயம்புகின்றார். துன்பம் மிக்க பொழுது அதற்கு ஏதுவாயதை இவ்வாறு ஏசுவது உலகியல் வழக்கு.

     இதனால் முருகப் பெருமானை நினைய விடாமல் காம விச்சையைத் தூண்டிச் செலுத்துவது கண்டு நெஞ்சினைச் சினந்து கொண்டவாறு.

     (10)