18.
புன்மை நினைந்து இரங்கல்
புன்மை என்பது மேன்மைக்கும்
கீழ்மைக்கும் நடுவணதாய தன்மை. தனது அறிவு சிறிதாகிய
வழியும் பெரிதாக மதித்து ஒழுகுவது புன்மை உடையோர்
செயல். இப்பத்தின் கண் மகளிர்பால் பெறும்
சிற்றின்பமே பெரிதென எண்ணியும் அதற்குரியன
மொழிந்தும் செய்தும் ஒழுகும் புன்மைத் தனமை உளதாதலை
அறிந்து வருந்துகின்ற வடலூர் வள்ளற் பெருமான் மிக
இரங்குகின்றார். புன்மைப்பான்மையை மக்கள்
உள்ளத்தில் நிலைப்பெறச் செய்வது பொது மகளிரின்
செயலாதலின் அதனைப் பாட்டுத்தோறும் எடுத்தோதி
அம்மகளிரிடத்தே ஆடவர்க்கு விருப்பின்மை உண்டாகும்
பொருட்டு அப்பொது மகளிரின் குணஞ் செயல்களைப்பாட்டுத்
தோறும் விரித்துக் கூறுகின்றார். இம்மகளிரைப் பொருட்
பெண்டிர் என்றும், மாய மகளிர் என்றும், வஞ்ச மகளிர்
என்றும், கள்ள மாதர் என்றும் சான்றோர் கூறுவர். முன்
நாளில் இருந்த அரசுகள் இப்பெண்டிர் இருப்புக்கு இடந்
தந்தன. இந்நாளைய அரசு அதற்கு இடம்தராது மக்கள்
சமுதாயத்தைத் தூய்மை செய்துவிட்டது.
கட்டளைக்
கலிப்பா
252. மஞ்சட் பூச்சின் மினுக்கி னிளைஞர்கள்
மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
கெஞ்சிக் கொஞ்சி நிறையழிந் துன்னருட்
கிச்சை நீத்துக் கிடந்தன னாயினேன்
மஞ்சுற் றோங்கும் பொழிற்றணி காசல
வள்ள லென்வினை மாற்றுத னீதியே
தஞ் வந் தடைந்திடு மன்பர்கள்
தம்மைக் காக்கும் தனியருட் குன்றமே.
உரை: மஞ்சள் பூசப் பட்டதாலும் பொற்பால் உளதாகும் அழ கொளியாலும் இளைஞர் உள்ளங்களை மயக்கும் ஒளி பொருந்திய கண்களை யுடைய மகளிரிடத்துக் கெஞ்சி நின்றும் கொஞ்சிப் பேசியும் நிறையழிந்து உன்னுடைய அருள் நலத்தில் விருப்பம் கொள்ளாமல் கிடந்தவனாகிய நாயினேன், மேகம் தவழ்ந்துலவ வுயர்ந்த சோலைகள் நிறைந்த தணிகை மலையிலுள்ள வள்ளலாகிய முருகப் பெருமானே, எளிமை யுற்று வந்திடும் அன்பர்களைக் காத்தருளும் ஒப்பற்ற திருவருள் மலை நீயாதலால் எனது வினைத் தொடர்பை நீக்குவது உனக்கு நீதியே யாகும். எ. று.
மங்கல மகளிர்க்குச் சிறப்பளிக்கும் மஞ்சளை யறைத்து முகத்திலும் கையிலும் கழுத்திலும் மார்பிலும் பூசிக் குளிப்பதால் உடம்பிற் படியும் பொன்னிறம், மஞ்சட் பூச்சு. விரைப் பொருள்களையும் பிற அணிகளையும் ஆடைகளையும் கொண்டு ஒப்பனை செய்து பொற்புறுத்தலால் மேனியிற் பிறக்கும் வனப்பொளி மேனி, மினுக்கு எனப்படும். மகளிர்பால் காணப்படும் இவ்விரண்டாலும் இளமை நலம் நிறைந்த ஆடவர் உள்ளம் காம மயக்கம் அடைதலால், “மஞ்சட் பூச்சின் மினுக்கின் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள்விழி மாதர்” என்று உரைக்கின்றார். இள மகளிரின் கட்பார்வையில் காதலுணர்வைப் பிறப்பிக்கும் காட்சி சிறந்து நிற்பது பற்றி, “வாள்விழி மாதர்” எனக் குறிக்கின்றார். “நாட்டமிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரையாகும்” (களவு) என்பது தொல்காப்பியம். கெஞ்சுதல், அன்பால், எனிமைப்பட ஒழுகுதல். அன்பு மிகுதி தோன்ற மென்மொழிகளைப் பன்னிப் பேசுதல் கொஞ்சுதலாகும். அறிவை நன்னெறிக்கண் நிறுத்துதல் நிறை. இறைவன் திருவருட்பேற்றின் கண் விருப்பமுற வேண்டிய யான் அதனை விடுத்துக் காம விச்சையிற் கருத்தைச் செலுத்திக் கீழ்ப்பட்டமை விளங்க, “நின் அருட்கு இச்சை நீத்துக் கிடந்தனன்” என்றும், நன்பொருள் பலவிருக்கப் பயனில்லாத என்பு கடித்து வருந்தும் நாயின் தன்மை யுடையனாயினேன் என்பார், “நாயினேன்” என்றும் கூறுகின்றார். உலகியல் வாழ்வு நல்கும் துன்பத்தால் உடலும் உள்ளமும் மெலிந்து எளியராய் வந்தடையும் மெய்யன்பர்கட்குப் புகல் தந்து உய்விக்கும் அருளாளனாதல் பற்றித் “தஞ்சத்தால்” வந்தடைந்திடும் அன்பர்கள் தம்மைக் காக்கும் தனியருட் குன்றம்” என முருகப் பெருமானைச் சிறப்பிக்கின்றார். இவ்வாற்றால் நாயனைய என் துன்ப வேதுவாகிய தீவினைகளைப் போக்கி யருளுவது முறையாம் என்பாராய், “என் வினை மாற்றுதல் நீதியே” என்று வேண்டுகின்றார்.
இதனால் மகளிர்பால் இச்சை கொண்டு திருவருளின்பால் அன்பு கொள்ளாத புன்மைத் தன்மை எடுத்தோதி இரங்கியவாறாம். (1)
|