254.

    வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
        மங்கை யர்க்கு மயலுழந் தேயவர்
    நஞ்ச மேவு நயனத்தில் சிக்கியே
        நாயி னேனுனை நாடுவ தென்றுகாண்
    கஞ்ச மேவு மயன்புகழ் சோதியே
        கடப்ப மாமலர்க் கந்த சுகந்தனே
    தஞ்ச மேயென வந்தவர் தம்மையாள்
        தணிகை மாமலைச் சற்குரு நாதனே.

உரை:

     தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன் புகழோதி வழிபடும் அருட்சோதியுடையவனே, கடம்பு மலர் மாலைகளால் நறுமணம் கமழும் நல்ல கந்தசாமிக்கடவுளே, எளிமை யுற்று வந்த அன்பர்களை ஆண்டருளும் தணிகை மலைமேல் அமர்ந்த சத்தாகிய ஞானம் அருளும் ஆசிரியர்க்குத் தலைவனே, வஞ்சம் பொருந்தி விளங்கும் மகளிரது காம மயக்கமுற்று வருந்தி அவர்களுடைய விடம் பொருந்திய கட்பார்வையிற் சிக்குண்டுறையும் நாயின் தன்மை யுடைய யான் உன்னை யெண்ணி வழி படுவது எப்போதோ? அருள் புரிக, எ. று.

     கஞ்சம் - தாமரை. முருகப் பெருமான் புகழ் வகை பலவற்றையும் எடுத்தோதி வழிபட்டது பற்றிக் “கஞ்ச மேவும் அயன் புகழ் சோதியே” என்கின்றார். பிரமன் முருகனை வழிபட்ட வரலாற்றைத் திருத்தணிகைப் புராணத்துப் பிரமன் சிருட்டி பெறு படலத்துட் காண்க. கடம்பு மலர் களாலாகிய மாலை யணிந்து திருமேனி அம்மலர்களின் நறுமணத்தால் சிறந்து விளங்குதல் புலப்படக். “கடம்ப மாமலர்க் கந்த சுகந்தனே” என்கின்றார். சுகந்தன்- இனிய மணம் கமழ்பவன்; நன்மை தரும் கந்தசாமிக் கடவுள். தஞ்சம், எளிமைத் தன்மையைப் புலப்படுத்துவது; ஈண்டுப் புகல் என்னும் பொருள்பட வந்தது. சற்குரு - ஞானாசிரியர். சத்து. ஞானம் - சற்குருவாய்ச் சிவனுக்கு ஞானப் பொருளை யுரைத்துக் காட்டிய புராண வரலாறு கொண்டு “சற்குரு நாதன்” எனச் சாற்றுகின்றார். ஈண்டுக் கூறப்படுவோர் கற்புடைய குலமகளிரின் வேறாய பொருள் வேட்கையுடைய புறப்பெண்டிர் என்றற்கு, “வஞ்சமே குடி கொண்டு விளங்கிய மங்கையர்” எனவும், காமத்தால் மயக்க முற்றார்க்கு, அம்மங்கையரின் கண் விழிகள் செய்யும் பார்வை, பிரியா வகைப் பிணிக்கும் வலையாய் அவர் மனத்தைச் சிக்குவித்தலால், “நஞ்ச மேவும் நயனத்திற் சிக்கியே” எனவும், காம விச்சையாற் பிணப்புண்ட மனம் ஞானப் பொருளை நினையாததனால், “நாயினேன் உனை நாடுவ தென்று காண்” எனவும் இசைக்கின்றார். காணப்பட்டார் மனத்தை வருத்துவது பற்றி, “நஞ்ச மேவு நயனம்” எனக் குறிக்கின்றார்.

     துவும் மேற்கூறியவாறு காம நுகர்ச்சியிற் சிக்குண்டுழலும் புன்மை யுரைத்தவாறாம்.

     (3)