255. பாவ மோருரு வாகிய பாவையர்
பன்னு கண்வலைப் பட்டு மயங்கியே
கோவை வாயிதழ்க் கிச்சைய தாகிநின்
குரைகழற் கன்பு கொண்டில னாயினேன்
மேவு வார்வினை நீக்கி யளித்திடும்
வேல னேதணி காசல மேலனே
தேவர் தேடரும் சீரருட் செல்வனே
தெய்வ யானை திருமண வாளனே.
உரை: தன்னை யடைபவர் வினைத் தொடர்பை அறுத்தொழித்து, அருள் புரியும் வேலவனே, தணிகை மலைமேல் எழுந்தருள்பவனே, தேவரனைவரும் தேடி யறிய வியலாத புகழ் பொருந்திய திருவருளாகிய செல்வ முடையவனே, தெய்வயானையாரைத் திருமணம் செய்து கொண்ட பெருமானே, தீவினையின் வடிவமாகிய மங்கையரின் காமக் குறிப்புரைக்கும் கண்பார்வையாகிய வலையிற் சிக்குண்டு அறிவு மயங்கி அவர்களுடைய கோவைப் பழம் போற் சிவந்த வாயிதழின்கண் ஆசை யுடையனாகி நினது ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிக்கண் அன்பில்லாதவனாய் விட்டேன்; எனினும் என்னை ஆண்டருள்க, எ. று.
தன்னை யடைந்தவர்களை விடாது பற்றி நிற்கும் வினைகள் அவர்களாற் செய்யப்பட்டு இறைவனால் அவர்களோடு சேர்த்துப் பிணிக்கப் பட்டவை யாதலால், பிணித்த அவனால் தொடர்பறுக்கப்படும் தன்மை யுடையவாதல் பற்றி, “மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே” என்று கூறுகின்றார். “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” எனத் திருவள்ளுவர் கூறுவது காண்க. “வினையாயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன்” (ஈங்கோய்) என்று ஞானசம்பந்தர் கூறுவது அறிக. தணிகை அசலம், தணிகாசலமென வந்தது வடநூற்புணர்ப்பு. அசலம் - மலை. தேவர்களின் அறிவும் முழுமை யுடைய தன்மையின், “தேவர் தேடரும் சீர் அருட் செல்வனே” எனவும், அருளும் செல்வ மெனப்படுதலால், அருளுடையானை “அருட் செல்வன்” எனவும் புகழ்கின்றார். பகை கொண்டு தீங்கு புரிந்த அசுரர்களைக் கொன்று செய்த வென்றி நலம் கொண்டு இந்திரன் கொடுப்பத் தெய்வயானையாரைத் தேவர்கள் பரவிப் போற்றத் திருமணம் செய்து கொண்ட சிறப்புப் பற்றி முருகப் பெருமானைத் “தெய்வயானை திருமண வாளனே” என்று போற்றுகிறார். தீவினைப் பயன் வட மொழியிற் பாவம் என வழங்கும். மகளிர்பாற் பெறப்படும் இன்பத்தினும் பாவப் பயனாகிய துன்பம் மிக்கிருப்பது பற்றிப் “பாவம் ஓர் உருவாகிய பாவையர்” எனப் பழிக்கின்றார். பாவை போலுதலின் பாவை யென மகளிரைப் புனைந்துரைப்பது வழக்கு. இளமைச் செவ்வியில் தம்மைக் காண்பார்க்குக் கட்பார்வையால் காமக் குறிப்புரைக்கும் இயல்பினதாதலால், “பாவையர் பன்னு கண்” என்று சிறப்பிக்கின்றார். “கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து” (குறள்) என்று பெரியோர் கூறுவது காண்க. கட்பார்வையால் காம மயக்க முற்றார் பிரிவரிய தொடர்புற்று அவரையே நச்சிச் சூழ்தலால், “கண்வலைப்பட்டு மயங்கி” எனவும், காமக் கூட்டம் பெறும் போது நிகழும் அதரபானம் என்னும் நுகரச்சியைக் “கோவை” வாயிதழ்க் கிச்சையதாகி “எனவும், அக்காலத்து எய்தும் மயக்கத்தால் இறைவன் திருவடிக்கண் அன்பு தோன்றா தொழிதலால், “குரை கழற் கன்புகொண்டிலனாயினேன்” எனவும் இயம்புகின்றார். கழற்குள் சிலம்பிற் போலப் பரற்கள் பெய்தலால், அதனைக் “குரைகழல்” எனக் குறிக்கின்றார்கள்.
இதனால் மகளிர் பால் கொண்ட இச்சையால் முருகன் திருவடிக்கண் அன்பு செய்யாத புன்மைத் தன்மையைப் புகன்றவாறு. (4)
|