256. கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
கடைய னேனுயிர் வாட்டிய கன்னியர்
உரத்தைக் காட்டி மயக்க மயங்கினேன்
உன்றன் பாத வுபயத்தைப் போற்றிலேன்
புரத்தைக் காட்டும் நகையி னெரித்ததோர்
புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
வரத்தைக் காட்டு மலைத்தணி கேசனே
வஞ்ச னேற்கருள் வாழ்வு கிடைக்குமோ.
உரை: புன்சிரிப்பால் முப்புரத்தை யெரித்துச் சாம்பராக்கிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை யுரைத்த குரு முதல்வனே, தொழுதார்க்கு வரமருளும் மலையாகிய தணிகைப் பெருமானே, கைகளாற் காமக் குறிப்புரைத்தும் கண்களாற் பார்வை செலுத்தியும் கடையனாகிய எனது உயிரை வருத்துகின்ற மகளிர் தமது மார்பைக் காட்டி என்னுள் காம மயக்கம் விளைவிக்க யானும் மயங்கி உன்னுடைய இரண்டாகிய திருவடிகளை வழிபடா தொழிந்தேனாதலால் வஞ்ச நெஞ்சனாகிய எனக்கு உனது அருள் வாழ்வு எய்துமோ? கூறுக. எ. று.
திரிபுரத் தசுரர்கள் பொர வருவது கண்டு சிவன் சினங் கொண்டு சிறிது நகைத்த போது அப்புரங்கள் எரிந்து சாம்பரான வரலாறு நினைந்துரைக்கின்றாராதலால், “புரத்தைக் காட்டும் நகையின் எரித்ததோர் புண்ணியன்” என்று புகழ்கின்றார். புரத்தை யழித்தது புண்ணியச் செயல் என்ற குறிப்புப் புலப்படப் “புண்ணியன்” என்று கூறுகின்றார். முருகன் பிரமனை யொறுத்தற் கேதுவாகிய பிரணவப் பொருளைச் சிவ பெருமானுக்கு குரு வடிவில் இருந்து உரைத்துக் காட்டிய செய்தி, “புண்ணியற்குப் புகல் குருநாதனே” என்பதனால் உரைக்கப்படுகிறது. தொழுபவர்க்கு வேண்டும் வரமருளும் பெருமான் உறையும் மலையாதலால், “வரத்தைக் காட்டும் தணிகை” என்கிறார். தணிகை ஈசன், தணிகேசன் என வந்தது. கையாற் சைகை காட்டியும், கட்பார்வையால் காதற் குறிப்புணர்த்தியும் ஆடவன் உள்ளத்தில் காமவேட்கையைக் கிளர்ந்தெழச் செய்தலால் இளமகளிரைக் “கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே உயிர் வாட்டிய கன்னியர்” எனவும், கொங்கைளைக் காட்டிக் காதற் புணர்ச்சி விருப்பத்தை அறிவித்து ஆடவன் நினைவை மயக்குதல் பற்றி, “உரத்தைக் காட்டி மயக்க மயங்கினேன்” எனவும் இசைக்கின்றார். கண்களை நீட்டல், கண்களைப் பரக்க விழித்து நீளப் பார்ப்பது. கடைப்பட்ட குணஞ் செயல்களை யுடைய னாதலால் அறிவிழந்தேன் என்பார், “கடையனேன்” என்றும், மகளிரின் கையும் கண்ணும் பண்ணும் காமச் சேட்டைகளால் உயிருணர்வு வாடிச் சுருங்குமாறு புலப்பட, “உயிர் வாட்டிய கன்னியர்” என்றும் கூறுகின்றார். கன்னியர், ஈண்டுக் காமச் செவ்வி கனிந்த இளம் பெண்டிர். உரம்-மார்பு, ஆகு பெயராய்க் கொங்கைகட்கு ஆயிற்று. காம நினைவு செயல்களை நெஞ்சிற் கொண்டு புறத்தே வெளிப்படாதபடி வஞ்சித் தொழுகியதால், மெய்ம்மை யாளர்க்கு உரியதாகிய திருவருள் இன்ப வாழ்வு எனக்கு எய்த வாய்ப்பில்லை யென அஞ்சுதல் தோன்ற, “வஞ்சனேற் கருள் வாழ்வு கிடைக்குமோ” என வருந்துகின்றார்.
இதனால் மகளிருடைய உருவாலும் நலத்தாலும் அறிவு மயங்கித் திருவருட் பேற்றை நினையாத புன்மை தெரிவித்தவாறாம். (5)
|