257. காச மேகங் கடும்பிணிச் சூலைமோ
காதி யாத்தந்து கண்கலக் கஞ்செயும்
மோச மேநிச மென்றுபெண் பேய்களை
முன்னி னேனினை முன்னில னாயினேன்
பாச நீக்கிடு மன்பர்கள் போலெனைப்
பாது காக்கும் பரமுனக் கையனே
தேசம் யாவும் புகழ்தணி காசலச்
செல்வ மேயருட் சிற்சுக வாரியே.
உரை: நாடுகள் அனைத்தும் புகழ்ந்து போற்றும் தணிகை மலையில் எழுந்தருளும் செல்வப் பயனாகிய பெருமானே, திருவருள் ஞான நலத்துக்கெல்லாம் வருவாயாக வுள்ளவனே, காச நோய், மேக நோய், கடும் பிணியாய சூலை நோய், மயக்க நோய் முதலிய நோய்களைக் கொடுத்துக் கண் கலங்கி வருந்தச் செய்யும் மகளிரின் மோசச் செயல்களை மெய்ம்மை யானவை யென்று நினைந்து ஒழுகினேனே யன்றி உன்னை நினையா தொழிந்தேன்; ஆயினும் உலகியற் பாசங்களின் நீங்க விரும்பும் மெய்யன்பர்களைத் திருவருள் புரிந்து காத்தளிப்பது போல் என்னையும் காப்பது நினது பொறுப்பாகும், எ. று.
தேசம், இடப் பொருட்டான தேயம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. தேயம் என்பதன் உண்மை வடிவம் தேஎம் என்பது; ஈண்டு நாடுகள் மேனிற்கிறது. நாட்டவர் அனைவரும் கண்டு போற்றும் சிறப்புடைய தென்றற்குத் “தேசம் யாவும் புகழ் தணிகாசலம்” என்றும், செல்வப் பயனாகிய இன்ப வடிவினனாதலால் தணிகைமுருகனைத் “தணிகாசலச் செல்வமே” என்றும், திருவருளால் எய்தப் பெறும் ஞானவின்பம் அப்பெருமானால் உளதாதல் பற்றி, “அருட் சிற்சுக வாரியே” வின்பம் அப்பெருமானால் உளதாதல் பற்றி, “அருட் சிற்சுக வாரியே” என்றும் உரைக்கின்றார். வாரி-வருவாய்; கட லெனினும் அமையும். நோய்வகையும் அவற்றின் முதலையும் நாடி யறிந்தவராதலால், வடலூர் வள்ளற் பெருமான் காசம் மேகம் முதலியவாகக் கூறியன பெண் புணர்வால் உண்டாவன என்றற்குக் “காசம் மேகம் கடும்பிணிச் சூலை மோகாதி கண் கலக்கஞ் செயும் பெண் பேய்கள்” எனவும், இவற்றைத் தரும் வகையில் அவர்கள் சொல்லுவனவும் செய்வனவும் மோசமாம் என்பார், “கண்கலக்கம் செயும் மோசம்” எனவும், மோசமானவற்றைப் பொய்யாய்த் துன்பம் தருவன என நினையாது இன்பம் தரும் மெய்ம்மை எனக் கருதி ஏமாந்தது கூறுவார், “பெண் பேய்களை முன்னினேன்” எனவும், அதனால் முருகப் பெருமானை நினையாமையை வெளிப்பட விளம்பலுற்று, “நினை முன்னிலனாயினேன்” எனவும் மொழிகின்றார். நோயுற்ற வழிக் கண்ணீர் சொரிந்து வருந்துவதியல்பாதலால், “கண் கலக்கம் செயும்” என்று குறிக்கின்றார். முன்னுதல் - நினைத்தல். உலகியற் பாசம் - பெண், பொன், மண் என்ற மூன்றன் மேற் செல்லும் ஆசை பற்றித் தோன்றும் மனப் பிணிப்பு. ஆசைப் பிணிப்பு அற்றாலன்றித் திருவருட் பேற்றிற்கான முயற்சி கைகூடா தாகையால், “பாசம் நீக்கிடும் அன்பர்கள்” என்று அடியார் இயல்பு கூறுகின்றார்.
இதனால் பெண் புணர்வால் உளவாகும் நோய் வகைகளைக் கூறி அவற்றைக் கொடுக்கும் பெண் கூட்டம் நாடிய புன்மை நினைந்து புகன்றவாறாம். (6)
|