258.

    ஐய மேற்றுத் திரிபவ ராயினும்
        ஆசை யாம்பொரு ளீந்திட வல்லரேல்
    குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டுன்
        கோல மாமலர்ப் பாதம் குறித்திலேன்
    மையு லாம்பொழில் சூழும் தணிகைவாழ்
        வள்ளலே வள்ளி நாயக னேபுவிச்
    சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
        சாமி யேயெனைக் காப்பதுன் றன்மையே.

உரை:

     மேகம் தவழும் சோலைகள் சூழ்ந்த தணிகைப் பதியில் எழுந்தருளும் முருகப் பெருமானாகிய அருள் வள்ளலே, வள்ளியம்மைக்கு நாயகனே, உலகியல் ஆசையை முற்றத் துறந்த பரஞானவான்கள் போற்றித் துதிக்கும் சாமியே, பிச்சை எடுத்துத் திரிகின்ற ஏழைகளானாலும் தாம் ஆசைப்படுகின்ற பொருளைக் கொடுக்க வல்லவாகளானால் அவர்களுக்குத் தமது உடம்பைக் கொடுக்கும் மங்கையரின் விருப்பத்தில் வீழ்ந்து உன்னுடைய அழகிய பெரியதாமரைப் பூப்போன்ற திருவடிகளைக் கருத்திற் கொண்டேல்லை எனினும் எளியவ னினாகிய என்னை அருள் செய்து காப்பது உனக்குக் கடனாகும், எ. று.

     வானளாவ உயர்ந்த சோலைகளில் மேகங்கள் பரந்து தவழ்வது இயற்கை யாதலால், “மையுலாம் பொழில்” என்று குறிக்கின்றார். தணிகை மலையில் எழுந்தருளித் தன்னை நினைந்து வழிபடுவார்க்கு வேண்டுவன அளித்தருளும் செயலுடையனாதல் பற்றி முருகனைத் “தணிகை வாழ் வள்ளலே” என்றும், வள்ளிநாயகியாருடன் எப்பொழுதும் மகிழ்ந்து இருப்பவன் ஆதலால் “வள்ளி நாயகனே” என்றும் போற்றுகின்றார். உலக வாழ்வு தரும் இன்பங்களில் ஆசை கொள்ளாமல் அவற்றைப் பற்றறத் துடைத்தளித்து மேலான திருவருள் ஞானத்தை மிக உடைய பெருமக்களைப், “புவிச்சையறும் பரஞானிகள்” என்று உரைக்கின்றார். புவிச்சை - புவி வாழ்வில் உண்டாகும் இச்சை. புவி- நில உலக வாழ்வு. புவி இச்சை, புவிச்சை என வந்தது. பரஞானிகள்-பரஞானத்தால் பரம்பொருளைக் காண்பவர். “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்” என்று அருணந்தி சிவனார் முதலிய பெரியோர்கள் உரைப்பதால், “புவிச்சை யறும் பரஞானிகள்” என்றும், பரஞானத்தை உணர்த்தும் பரஞான மூர்த்தியாதலின் முருகப் பெருமானைத் தொழுது போற்றுகின்றார்கள் என்பதற்காகப், “பரஞானிகள் போற்றும் சாமியே” என்றும் புகழ்கின்றார். இன்னான், இனியன், செல்வன், வறியன், உடையவன், இல்லாதவன் என்ற வேற்றுமை நோக்காது அவர்களிடம் உள்ள பொன்னும் பொருளுமாகியவற்றின் மேலே பேராசை யுற்று உழல்பவர்களாதலின் பொருட் பெண்டிரை, “ஐயமேற்றுத் திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல் குய்யம் காட்டும் மடந்தையர்” என்றும், அவர்பால் உண்டாகும் ஆசை ஆடவருடைய அறிவை மயக்குதலால் வேறு தூய எண்ணங்கள் தோன்றுதற்கு இடமின்றி மனம் இருண்டு விடுவதால் அருளொளி திகழும் திருவடி நினைக்கப் படாதொழிவது கொண்டு, “மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மாமலர்ப் பாதம் குறித்திலேன்” என்றும் கூறுகின்றார். குய்யம்-உபத்தம். இளமைப் பருவத்தில் இயல்பாய் உளதாகும் காதல் உணர்ச்சி மீதூர்ந்து அறிவை அடிமைப்படுத்து மிடத்து நல்லறி வுடையோர் அதனை வென்று தமது அறிவுக்கு அடிமைப் படுத்திக் கொள்வதும் அறிவால் மென்மை யுடையோர் அதற்கு அடிமையாவதும் உலகியலின் இயல்பாக, யான் அறிவின்கண் திண்மை யிலனாய் அதன் வாய்ப்பட்டு ஒழிந்தேன் ஆதலால் என்னை அதனினின்று மீட்டுக் காத்தருளுவது உனக்குக் கடன் என்பாராய், “எனைக் காப்பது உன் தன்மை” என்று முறையிடுகின்றார். “திருத்தித் திருத்தி வந்து என் சிந்தை இடங்கொள் கயிலாயா” (ஊர்த்தொகை) என்று சுந்தரர் கூறுவதனால், “காப்பது உன் தன்மையே” என்று உரைக்கின்றார்.

     இதனால் பொருட் பெண்டிர்பால் வைத்த ஆசை மிகுதியால் முருகப் பெருமான் திருவடியை நினையாத புன்மை கூறியவாறு.

     (7)