259.

    கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
        கத்தைக் காட்டி அகத்தைக் கொண்டேயழி
    மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
        மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
    பண்ணைக் காட்டி உருகும் அடியர்தம்
        பத்திக் காட்டிமுத் திப்பொருள் ஈதென
    விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
        வேல னேஉமை யாள்அருள் பாலனே.

உரை:

     பண் சுமந்த பாடல்களைப் பாடி அன்பால் மனம் உருகும் அடியவர்களுடைய பக்தியை வியந்து முத்தி தரும் ஞானப் பொருள்இது என்று உரைத்தருளும் தணிகை மலையில் வேலேந்தி எழுந்தருளும் பெருமானே, உமையம்மை எடுத்து வளர்த்தருளிய இளையவனே, கண்ணையும் இரண்டு கொங்கைகளையும் காட்டித் தம்மைக் காண்பார் காம மயக்கமுறச் செய்து அவர்கள் மனத்தைக் கவர்ந்து கொண்டு மண்ணுலகில் அழிந்து கெடும்படிச் செய்யும் மாயம் வல்ல பொருட் பெண்டிரால் உண்டாகும் மயக்கத்தைப் போக்கி நின்னுடைய திருவடிகளைப் பணிந்தேத்தி உய்தி பெறுவேனோ, அருளுக, எ. று.

     முத்தமிழ்ப் பாடல்களை அன்பர்கள் விரும்பிப் பாடக் கேட்டு நாளும் மகிழ்பவனாதலால் அவனுடைய அடியார்கள் பாடி உருகுவராதலின், “பண்ணைக் காட்டி உருகும் அடியர்” என்று சிறப்பிக்கின்றார். “பழுதில் நிற்சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே” (திருபுகழ் 825) எனவும், “வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்” (அலங். 22) எனவும், அருணகிரியார் உரைப்பது காண்க. பண் என்பதால் தமிழ்ப்பாட்டு என்பது பெற்றாம். உண்மை உணர்வால் அன்பு பெருகிய வழி உள்ளம் உருகுவதும் பாட்டுக்கள் தோன்றுவதும் இயல்பாதலின், “பண்ணைக் காட்டி உருகும் அடியர்” என்று தெரிவிக்கின்றார். அவர் பால் விளங்கும் பத்திமைக்கு அருள் பாலித்து முத்திப் பேற்றுக்குரிய ஞானம் அறிவுறுத்தும் செயலினனாதலால், “பத்தி காட்டி முத்திப்பொருள் ஈதெனக் காட்டும் திருத்தணிகாசல” என விளம்புகின்றார். “ஆனபய பத்திவழி பாடுபெற முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக்காரன்” (திருவேளைக்காரன் வகுப்பு) என அருணகிரியார் கூறுவது காண்க. எனவென் எச்சம் காட்டும் என்பதனோடு முடிந்தது. வானளாவ உயர்ந்து நிற்பது என்றற்கு, “விண்ணைக் காட்டும் திருத்தணிகாசல” என்கின்றார். முத்தி யின்பத்துக்குரிய இடம் இது என்று விண்ணுலகைக் காட்டும் தணிகாசல வேலவன் என்றார் எனினும் அமையும். அப்பொருளுக்கு விண் என்பது வீடு பேற்றுலகம் என்பது குறிப்பாம். சரவணப் பொய்கையில் கிடந்த முருகனாகிய குழவியை எடுத்து வளர்த்த பெருமையுடையவளாதலால், “உமையாள் அருள்பாலனே” என்று உரைக்கின்றார். கண்களால் காமக் குறிப்புணர்த்திக் கொங்கைகளால் காம வுணர்வை எழுப்பி மோகத்தை உண்டு பண்ணுவது பற்றிக், “கண்ணைக் காட்டி இருமுலைகாட்டி மோகத்தைக் காட்டி” என்றும், ஆடவர் மனத்தைக்கவர்ந்து கேடு விளைவிக்கும் நினைவுகளை எழுப்பி மண்ணுலகில் மடிந்து மண்ணாகச் செய்யும் இயல்புணர்த்தற்கு, “அகத்தைக் கொண்டே அழி மண்ணைக் காட்டிடும்” என்றும், இன்பந் தரும் சொல்லும் செயலும் உடையராய்த் துன்பம் விளைவிக்கும் தன்மையுடையவராதல் பற்றி, “மாய வனிதைமார்” என்றும் கூறுகின்றார். “மாய மகளிர்” (குறள்) எனத் திருவள்ளுவரும் கூறுவது காண்க. அவரது புணர்ப்பு நினைவு, சொல், செயல் எல்லாவற்றையும் மயக்கிப் பிணித்தலின், அதனை “வனிதையர் மால்” என்று குறித்துரைக்கின்றார். திருவடிப் பேற்றுக்கு இந்த மாய வனிதைமார் தொடர்பு தடையாதலின் இதனை விரித்துரைக்கின்றார்.

     இதனால் பொருட் பெண்டிரின் பொய்ப் போகத்தை நாடும் புன்மையை நினைந்து உரைத்தவாறாம்.

     (8)