26.

    சேவலங் கொடிகொண்ட நினையன்றி வேறுசிறு
        தேவரைச் சிந்தை செய்வோர்
        செங்கனியை விட்டு வேப்பங் கனியை யுண்ணுமொரு
        சிறுகருங் காக்கை நிகர்வார்
    நாவலங் காரமற வேறுபுகழ் பேசிநின்
        நற்புகழ் வழுத்தாத பேர்
        நாய்ப்பால் விரும்பியான் றூய்ப்பாலை நயவாத
        நவையுடைப் பேயராவார்
    நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
        நின்றுமற் றேவல் புரிவோர்
        நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
        நெடிய வெறு வீணராவர்
    தாவலம் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     மருதவளம் பொருந்திய சென்னையிற் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளி பொருந்திய தூய மணிகளுள் சைவ மணியாய்த் திகழும் ஆறுமுகம் கொண்ட தெய்வ மணியே, கோழிச் சேவல் எழுதிய கொடியைக் கொண்ட நின்னை யொழிய வேறு தெய்வங்களைச் சிந்தித்து வழிபடுவோர், செவ்வாழைக் கனியை விட்டு வேப்பம் பழ.த்தை யுண்ணும் சிறுமைப் பண்புடைய கரிய காக்கைக்கு ஒப்பாவர்; சொல்லழ கின்றி வேற்றவர் புகழ்களைப் பேசி நின்னுடைய நல்ல புகழை எடுத்தோதாதவர் நாயின்பாலை நயந்து பசுவின் தூய பாலை விரும்பாத குற்றமிக்க பேய் மக்களாவர்; வெற்றி நலம் கொடுக்கும் நின்னுடைய குற்றேவலை ஏலாமல் ஒதுங்கி நின்று பிறருக்கு ஏவற் பணி செய்பவர், நெல்லுக் கிறைக்காமல் புல்லுக்கு நீர் இறைக்கும் நெடிது வெறுவியராகிய வீணராவார்கள்; அவர் அறிவு தான் என்னே! எ. று.

     தாவலம்-மருத வளம்; இது தாவளம் எனவும் வழங்கும். வள்ளலார் காலத்தில் சென்னை நகர் பெருவீடுகளின் பெருக்கமின்றி மருத வயல்கள் பொருந்தியிருந்தமையின், “தாவலம் சென்னை” என்று சிறப்பிக்கின்றார். சேவலங் கொடி - கோழிச் சேவல் எழுதிய கொடி. முருகன் கோழிக் கொடி யுடையவன் என்பதைக் “கோழிக் கொடியோன் றன் தாதை போலும்” (இன்னம்பர்) என்று திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. நல்வினையால் தெய்வ பதம் பெற்று முதற் கடவுள் ஆணைவழி நிற்போராதலால், சிவத்தின் வேறாயது பற்றி, “வேறு சிறு தேவர்” என்றும், அவரைச் சிந்தித்து வழிபடுவோரை, “செங்கனியை விட்டு வேப்பங்கனியை யுண்ணும் ஒருசிறு கருங்காக்கை நிகர்வார்” என்றும் இகழ்கின்றார். செங்கனி - செவ்வாழைக் கனி. செங்கனியைச் செவ்விய சுவையுடைய கனி யெனக் கொள்ளினும் அமையும். “வண்டுமலர்ச், சேர்க்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ, காக்கை விரும்பும் கனி” (நன்னெறி) என்று சான்றோர் கூறுவது அறிக. நாவலங்காரம் - சொல்லழகு. பொருளிலார் புகழ்கள் பயனில்லன வாதலால், அவற்றை “வேறு புகழ்” எனவும், முருகன் புகழை விரும்பாமல் பொருளிலார் புகழை விரும்பி யோதுபவர், நல்ல ஆவின்பாலை விரும்பாமல் நாயின் பாலை விரும்பும் பேயரை நிகர்ப்பர் எனவும் இகழ்கின்றார். பேய்த் தன்மை யுடையோர் நாய்ப் பாலை விரும்புவர் போலும். வலம், ஈண்டு வெற்றி நலம் குறித்து நின்றது. முருகப் பெருமான் பொருட்டு ஏவின பணி புரியாமல் பிறர்க்கு அரும்பணி செய்பவர், மிகவும் பயனற்ற வீணராய், நல்ல உணவுப் பொருளாகிய நெல்லுக்கு இறைப்பதை விடுத்துப் புல்லுக்கு இறைப்பவராவர் என்று கூறுகின்றார். “எக்காலும், நெல்லுக்கிறைப்பதே நீரன்றிக் காட்டு முளிப் புல்லுக் கிறைப்பரோ போய்” (நன்னெறி) என்பர் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள்.

     இதனால், முருகப் பெருமானைச் சிந்தித்தலும், புகழ் வழுத்தலும், ஏவல் புரிதலும் செய்யாதார் இழிவு கூறியவாறாம்.

     (26)