260. படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
கள்ள மாதரைக் கண்டு மயங்கினேன்
ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.
உரை: குன்றாத புகழ் பெற்ற தணிகை மலையை யுடையவனே, நில வுலகில் வாழும் மக்களைக் கீழ்ப்படுத்தும் படுகுழியும், பாவவகை யாவும் செய்து பயில்விக்கும் பாழ்த்த குழியும், தீநாற்றம் நிலைத்துள்ள சிறுகுழியும், சிறுநீர் சுரக்கும் கொடுமை பொருந்திய ஊற்றுக் குழியும், புழுக்கள் வளர்கின்ற குழியும், மிக்க மலம் ஒழுகும் குழியுமாகிய கருக் குழியையும் கள்ளத்தன்மையு முடைய பொய்ப் பெண்டிரைப் பார்த்து அறிவு மயங்கி னேனாதலால் நின்னுடைய புகழைத் தொழாதொழிந்த எனக்கு மெய்ப் பொருளாகிய வீடு பேறு எய்துமோ என அஞ்சுகிறேன், எ. று.
ஒடிதல் - குறைதல். “கடிமலர் கஞலிய ஒடியா வாசம்” (ஞானா) என்றாற் போல. பொன்றாற் புகழ் என்பது உணர்த்த, “ஒடிவில் சீர்” என்கின்றார். படி-நிலவுலகம். நல்லறிவு இழந்து தீநெறி மேற் கொண்டொழுகும் மக்களை மாக்கள் என்னும் மரபு பற்றி மகளிரின் கருக்குழியை, “மாக்களை வீழ்த்தும் படுகுழி” என்றும், மகளிர் மயக்கத்தில் வீழ்ந்தாரை எத்தகைய தீய செயல்களையும் செய்வர் என்பதற்குப், ‘பாவம் யாவும் பழகும் பாழ்ங் குழி” என்றும் கூறுகிறார். குடிகொள் நாற்றக் குழி-முடை நாற்றம் தங்கி யிருக்கும் குழி. சிறுநீர் - மூத்திரம். கடிமலக் குழி-மலம் நிறைந்த குழி. கருக்குழி - கருப்பையைத் தொடர்ந்திருக்கும் குழி. இத்தகைய குழியை மறைத்துக் கொண்டு உள்ளத்தில் உள்ள பொருள் வேட்கையையும் வெளியே புலப்படாது வஞ்சித்திருக்கும் மகளிரைக் “கள்ள மாதர்” என்று பழிக்கின்றார்.
இதனால் பொருட் பெண்டிரின் புறத் தோற்றத்தில் மயங்கி ஒழுகிய புன்மையை நினைந்து வருந்தியவாறாம். (9)
|