19.
திருவடி சூட விழைதல்
முருகப் பெருமான் திருவடியைத் தலையில்
சூடிக் கொள்ள விரும்புவது பொருளாக வருதலால் இப்பகுதி
திருவடி சூட விழைதல் என்று பெயர்
குறிக்கப்படுகிறது. திருவடியைத் தன் தலை தீண்டுமாறு
வணங்குவது இதன் கருத்து. பெருமக்கள் திருவடியை மலர் எனக்
குறிப்பது மரபாதலால், திருவடி தரையில் பட வணங்குவதைத்
திருவடி மலரைத் தலையில் சூடிக் கொள்ளுதல் என்பது
வழக்காயிற்று. திருவடியைச் சூடிக் கொள்வதற்குத் தாம்
விழைந்தமைக்குப் பொருட் பெண்டிர் தொடர் புறாமையும்
திருத்தொண்டர் தொடர்புறுவதும் உண்மை ஞான மெய்வதும்
காரணமாக வடலூர் வள்ளலார் இப்பத்தின்கண்
எடுத்துரைக்கின்றார்.
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
262. தேனார் அலங்கல் குழல்மடவார்
திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
கானார் கொடியெம் பெருமான்தன்
அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக்
கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே.
உரை: எருதெழுதிய கொடியையுடைய எங்கள் பெருமானாகிய சிவனது அருள் பொலியும் கண்ணின் மணி போல்பவனே, அற்புதமாகியவனே, மணங் கமழும் சோலைகள் சூழ்ந்த திருத்தணிகைப் பதியில் எழுந்தருளும் கரும்பு போல்பவனே, கருணையாகிய பெருங் கடலே, தேவருலகத்து அமிர்த மொப்பவனே, தேன் சொரியும் பூமாலை யணிந்த கூந்தலையுடைய மகளிரின்பத்தில் வீழ்ந்து மயங்காத மனத்திண்மை எய்தும் பொருட்டு அடியவனாகிய என் தலை மேல் உன் திருவடிகளை வைத்தருள வேண்டுகிறேன், எ. று.
ஆனார் கொடி-எருதின் உருவம் எழுதிய கொடி. சிவபெருமானுக்குச் சிறப்பாக உள்ள கொடியாதலின் அதனை, “ஆனார் கொடி எம்பெருமான்” என்று தெரிவிக்கின்றார். சிவபெருமானுடைய திருவருள், ஞானக் கண் போலுதலால் முருகனைப் “பெருமான் தன் அருட் கண்மணியே” என்றும், அற்புதத் தோற்றம் உடையவனாதலால், “அற்புதமே” என்றும் இயம்புகிறார். கான் - நறுமணம். கரும்பு போல்வதால் கரும்பே எனவும், அருட் பெருக்கால் பெரிய கடல் போல்வது பற்றிக் “கருணைப் பெருங் கடலே” எனவும், வானுலகத்துத் தேவர்கள் முயன்று பெற்ற அமிர்தம் போலத் தன்னை அடைந்தார்க்கு அழியா நிலையை அளித்தலால், “வானார் அமுதே” எனவும் கூறுகின்றார். இறைவன் திருவடியை முடி மேல் சூடிக் கொள்ள விழைவது அடியார் மரபாதலின், “திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாய்” என உரைக்கின்றார். “கறைகொண்ட கண்டத்து எம்மான்றன் அடிகொண்டு என்முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்” (அதிகை) என்று நம்பியாரூரரும், “நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்”(நல்லூர்) என்று நாவுக்கரசரும் உரைப்பது காண்க. இறைவன் திருவடியைத் தலைமேல் சூடிக் கொள்வதால் மகளிர் மேற் செல்லும் காம மயக்கம் உறாத திண்மை உண்டாகும் பொருட்டுத் திருவடியைச் சூடிக் கொள்ள விழைகிறேன் என்பாராய்த் “தேனார் அலங்கல் குழல் மடவார் திறத்தில் மயங்காத் திறல் அடைதற்கு நின் திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே” என்று வேண்டுகிறார். அலங்கல் - பூமாலை. மடவார் - இளமகளிர். திறல் - மனத்திண்மை.
இதனால் மகளிர்பால் பெறலாகும் சிற்றின்பத்தில் ஆசை கொள்ளாது மனத்திண்மை உண்டாகும் பொருட்டுத் திருவடியை என் தலை மேல் வைத்தருளுக என வேண்டியவாறாம் (1)
|