264.

    மின்னுண் மருங்குல் பேதையர்தம்
        வெளிற்று மயக்குள் மேவாமே
    உன்னும் பரம யோகியர்தம்
        உடனே மருவி உனைப்புகழ்வான்
    பின்னும் சடையெம் பெருமாற்கோர்
        பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
    மன்னும் சுடரே நின்திருத்தாள்
        அடியேன் முடிமேல் வைப்பாயே.

உரை:

     பின்னே தாழ்ந்து வீழ்கின்ற சடையை யுடைய எங்கள் சிவபெருமானுக்கு ஒப்பற்ற செல்வமே, திருத்தணிகை மலைமேல் எழுந்தருளி யிருக்கும் ஞானச் சுடரே, மின்ன்ற் கொடி போல் நுண்ணிய இடையையுடைய மகளிரின் பயனில்லாத மயக்கத்தில் வீழ்ந்தொழியாமல் உன்னையே நினைத்திருக்கும் பரம யோகியருடன் கூடி உன்னை மனமாரப் புகழும் பொருட்டு உன்னுடைய திருவடிகளை அடியேனது தலை மேல் வைத்தருள வேண்டுகிறேன், எ. று.

     பின்னே முதுகிடத்தே வீழ்கின்ற நீண்ட சடையை யுடையவராதலின் சிவனைப் “பின்னும் சடையெம் பெருமான்” என்றும், அப்பெருமானுக்குச் செல்வ ஞானப் புதல்வனாதலால் முருகப் பெருமானைச் சிவபெருமானுக்கு, “ஓர் பேறே” என்றும், தணிகை மலை மேல் விளங்கும் முருகனுடைய திருவுருவம் ஞான மூர்த்தமாதல் புலப்படத் “தணிகைப் பிறங்கலின் மேல் மன்னும் சுடரே” என்றும் புகழ்கின்றார். மின்னற் கொடி போல் சிறுத்த இடையை யுடைமையால் இளமகளிரை, “மின்னும் மருங்குல் பேதையர்” எனவும்,அவரது புணர்ப்பு வெறுமைத்தாதலின் அதனை, “வெளிற்று மயக்கு” எனவும் உரைக்கின்றார். பேதை - பெண். மேவுதல் - விரும்புதல். பரம்பொருளாகிய முருகப் பெருமானை ஒன்றிய உள்ளத்துடன் சிந்திக்கும் பெரியோர்களைப் பரம யோகியர் எனவும், அவர்கள் எஞ்ஞான்றும் அவனையே சிந்தித்திருக்கும் இயல்பினர் என்றற்கு, “உன்னும் பரமயோகியர்” எனவும், அவர்களது கூட்டம் தன்னைச் சேர்ந்தாரது சிந்தை அஞ்ஞான நெறியில் செல்லாவாறு தடுத்து அணைத்துக் கொள்ளுதலால், “யோகியர் தம்முடனே மருவி” எனவும், அந்நிலையில் நிகழும் வழிபாடு தூய ஞான மயமாதலின், “உனைப் புகழ்வான் நின் திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாய்” எனவும் வேண்டுகின்றார்.

     இதனால் பரமயோகியர்களான அடியார் கூட்டத்தில் கலந்து அவரது ஞானச் சூழற் காப்புப் பெற்று வழிபடும் பொருட்டுத் “திருவடியை முடிமேல் வைத்தருள வேண்டும்” என முறையிடுகின்றார்.

     (3)