266. விரதம் அழிக்கும் கொடியார்தம்
விழியால் மெலியா துனைப்புகழும்
சரதர் அவையில் சென்றுநின்சீர்
தனையே வழுத்தும் தகைஅடைவான்
பரதம் மயில்மேல் செயும்தணிகைப்
பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
வரதன் மகனே நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே.
உரை: மயில்கள் நடனம் செய்யும் மேலிடத்தை யுடைய தணிகை மலையில் எழுந்தருளும் பரனே, வெள்ளி மலையில் வாழும் வரதனாகிய சிவனுக்கு மகனே, மேற்கொண்ட விரதங்களை அழித்தொழிக்கும் கொடியவர்களாகிய பொய்ப் பெண்டிரின் காமக் கட் பார்வையால் மனம் மெலிவுற் றழியாமல் உன்னைப் புகழ்ந்துறையும் மெய்த் தொண்டர் கூட்டத்துட் சென்று அவரோடு நின் சிறப்புக்களை ஓதி வழிபடும் நலத்தை யெய்தும் பொருட்டு உன்னுடைய திருவடிகளை அடியேன் தலைமேல் வைத்தருள வேண்டுகிறேன்,
எ. று.
விரதமாவது மேற்கொள்ளும் நற்கொள்கை. அதனை அழியாமல் காப்பது ஞானப் பேற்றுக்குரிய நன்னெறியாம். மகளிர் தொடர்பு விரதங் காப்பதில் மேற்செல்லும் மனத்திட்பத்தைச் சிதைத்து விடுதலின் பொய்ம் மகளிரை, “விரதமழிக்கும் கொடியார்” எனக் கூறுகின்றார். கொடியார் - கொடுமையுடையவர். இங்குக் கொடுமையாவது நேரிய நெறியினின்றும் பிறழச் செய்வது. அம்மகளிர் கொடுமை செய்தற்குத் துணையாவது கட்பார்வையாதலின், “கொடியார் தம்விழியால்” என்றும், அப்பார்வை வயப்பட்டார் காம உணர்ச்சிக்கு இரையாகி மனவலி யிழந்தொழிதலால், “மெலியாது” என்றும் உரைக்கின்றார். சரதர்-மெய்ம்மையாளர்; மெய்த் தொண்டர் எனவும் அமையும். அவை-கூட்டம். தொண்டர் கூட்டத்து உறவு பத்தி ஞானம் நிலவும் சூழலாதலின் அதன்கண் சேர்ந்த வழி பத்தி நெறிபற்றி இறைவனைப் புகழும் வாய்ப்பு உளதாதலின், “உனைப் புகழும் சரதர் அவையில் சென்று நின்சீர் தனையே வழுத்தும் தகை அடைவான்” என்று இசைக்கின்றார். வெள்ளிப் பருப்பதம்-வெள்ளிமலை. வரதன்-அருள் செய்பவன்; ஈண்டு வெள்ளி மலைக்குரியனான சிவன்மேல் நின்றது. தணிகை மலைச் சோலைகளில் மயில்கள் ஆடுவதுண்மையின், “பரதம் மயில்மேல் செய்யும் தணிகை” என்கிறார். மேல் மயில் பரதம் செய்யும் தணிகை என மாறுக. பரதம், ஈண்டு ஆடுதல் மேற்று.
இதனால் மெய்த் தொண்டர் கூட்டத்துட் சேர்ந்து முருகன் சீர்களையே ஓதிப் பரவும் நல்வாய்ப்புப் பெறல் வேண்டித் தன் தலைமேல் திருவடியைச் சூட வேண்டியவாறாம். (5)
|