267.

    வெயில்மேல் கீடம் எனமடவார்
        வெய்ய மயற்கண் வீழாமே
    அயில்வேல் கரங்கொள் நினைப்புகழும்
        அடியார் சபையின் அடையும்வகைக்
    குயில்மேல் குலவும் திருத்தணிகைக்
        குணப்பொற் குன்றே கொள்கலப
    மயில்மேல் மணியே நின்திருத்தாள்
        அடியேன் முடிமேல் வைப்பாயே.

உரை:

     சோலைகளிடத்தே குயில்கள் இருந்து கூவி மகிழும் திருத் தணிகையில் எழுந்தருளும் அழகிய குணக் குன்றாகிய பெருமானே, தோகையை யுடைய மயில் மேல் இவர்ந்தருளும் மாணிக்க மணியே, வெயிலிடைப் பட்ட புழுப் போலப் பொருட் பெண்டிரின் வெவ்விய இச்சை மயக்கத்தில் வீழ்ந்து கெடாமைப் பொருட்டுக் கரிய வேற்படையைக் கையில் ஏந்துகிற நின்னைப் புகழ்ந்து பரவும் அடியார் கூட்டத்தில் யானும் சேருமாறு நின்னுடைய திருவடிகளை அடியேன் தலை மேல் வைத்தருள வேண்டுகிறேன், எ. று.

     இருள்படத் தழைத்த சோலைகளில் குயில்கள் கூடிப் பாடி மகிழ்வது இயல்பாதலால் பொழில் சூழ்ந்த தணிகைப் பதியைக், “குயில் மேல் குலவும் திருத்தணிகை” என்று கூறுகிறார். நற்குணங்களே திரண்ட மூர்த்தியாதலால் முருகப் பெருமானைக், “குணக் குன்றமே” என்றும், ஏனைக் குன்றங்களின் வேறுபடுத்தற்குப் “பொற் குன்றே” எனவும் புகழ்கின்றார். பசுமை, நீலம, வெண்மை ஆகிய நிறங்களை யுடைய தோகையை விரித்து நிற்கும் மயிலின் மேல் சிவந்த மாணிக்க மணியின் நிறங் கொண்டு விளங்குவது பற்றிக் “கலப மயில் மேல் மணியே” எனவும் பரவுகின்றார். கலபம் - தோகை. வெயிலில் வீழ்ந்த புழு துடித்துச் சாவது போலப் பொருட் பெண்டிரின் காமவிச்சை விளைக்கும் வெம்மையில் ஆடவர் உள்ளம் வீழ்ந்து கெடுவது தோன்ற, “வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயற்கண் வீழாமே” என்றும், அடியார் கூட்டத்தில் கலந்து கொள்ளின் அக்கேடு உண்டாகாது என்றற்கு, “நினைப் புகழும் அடியார் சபையின் அடையும் வகை” என்றும் உரைக்கின்றார். சபை - கூட்டம். முருகப் பெருமான் திருக்கையி னின்றும் நீங்காமல் இருப்பதாகையால், “அயில் வேற் கரங்கொள் நினை” எனவும் சிறப்பிக்கின்றார். அயில் - கூர்மை.

     இதனால் பொய்ப் பெண்டிர் விளைவிக்கும் காம வலையில் வீழாதபடி காப்பது அடியார் திருக்கூட்டத்தின் இயல்பாதல் உணர்த்தியவாறாம்.

     (6)