268. தனமும் கடந்தே நாரியர்மால்
தனையும் கடந்தே தவம்அழிக்கும்
சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர்
தெய்வச் சபையில் சேர்ந்திடவே
வனமும் கடமும் திகழ்தணிகை
மலையின் மருந்தே வாக்கினொடு
மனமும் கடந்தோய் நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே.
உரை: முல்லை வளமும் பாலை நிலமும் பொருந்திய தணிகை மலையில் வீற்றிருக்கும் மருந்தாகிய முருகக் கடவுளே, சொல்லும் நினைவும் கடந்து நிற்கின்ற பெருமானே, பொன்னாசை யற்று மகளிர்பால் செல்லும் இச்சையையும் துறந்து மேற்கொண்ட தவத்தைக் கெடுக்கும் வெகுளியையும் துறந்து நின்னை நினைக்கும் அடியவர்களின் தெய்வத் திருக் கூட்டத்தில் சேர்ந்தொழுகும் பொருட்டு நின் திருவடிகளை அடியேன் தலை மேல் வைத்தருள வேண்டுகிறேன், எ. று.
முல்லைத் திணை வளமும் பாலை நிலத்தன்மையும் பொருந்தி யிருப்பதால், “வனமும் கடமும் திகழ் தணிகைமலை” என்று கூறுகின்றார். மலைகளிடத்து வளர்ந்திருக்கும் செடி கொடி வேர் முதலியவற்றைக் கொண்டு மருந்து செய்வது இந்நாட்டு மருத்துவ நெறியாதலால், “மலையின் மருந்தே” எனவும், சொற்களின் எல்லையையும் நினைவெல்லையையும் கடந்து அப்பால் உள்ளவனாதலால், “வாக்கினொடு மனமும் கடந்தோய்” எனவும் கூறுகின்றார். “மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே” (சிவபு) என்பது திருவாசகம். தனம் - ஈண்டுப் பொன்னாசையைக் குறித்து நின்றது. நாரியர் மால் - மகளிர் மேல் உண்டாகும் ஆசை. தவம் பெரிது உடையார்க்கும் சினம் உண்டாயின் அது தவ முழுதையும் அழிக்கும் என்பது பற்றித் “தவம் அழிக்கும் சினம்” எனவும் உரைக்கின்றார். சினத்தைத் திருவள்ளவர் இது பற்றியே, “சேர்ந்தாரைக் கொல்லி” எனக் கூறுகிறார். இடையறாது முருகனை நினைதொழுகும் தொண்டர் முடிவில் அவன் திருவடியைச் சேர்தல் தெரிந்த உண்மையாதலால் அவர்களைச் “சேர்ந்தார்” என்று சிறப்பிக்கின்றார். அவர்களுடைய சிந்தையும் மொழியும் செய்வகையும் தெய்வ நிலையமாதலால் அவர்கள் கூடியுள்ள சபையைத் “தெய்வச் சபை” என்று புகழ்கின்றார். பொன்னாசை பெண்ணாசை முதலிய குற்றங்களைக் கடிந்தவராதலால் அவரது உறவு என் பாலும் அக்குற்றங்கள் உளவாகாமல் காக்கும் என்பது கருத்து.
இதனால் குற்றங் கடிந்த அடியார் கூட்டத்துள் யானும் சேர்ந்திருப்பதற்குத் தகுதி அளிப்பதால் திருவடியை முடி மேல் சூடிக் கொள்ளவிழைந்தவாறாம். (7)
|