269. கல்லாக் கொடிய மடவார்தம்
காமக் குழிக்கண் வீழாமே
நல்லார்க் கெல்லாம் நல்லவநின்
நாமம் துதிக்கும் நலம்பெறவே
சொல்லாற் புனைந்த மாலையொடும்
தொழுது தணிகை தனைத்துதிக்க
வல்லார்க் கருளும் நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே.
உரை: நல்லவ ரெல்லார்க்கும் நன்மையே அருளும் பெருமானே, கற்க வேண்டியவற்றைக் கல்லாத கொடிய பொய் மகளிரின் காம வேட்கை யெனும் குழியின்கண் வீழ்ந்து கெடாமல் நின் திருப்பெயரை ஓதி வழிபடும் நற்பண்பு எய்தும் பொருட்டுச் சொல்மாலையும் மலர் மாலையும் தொடுத்தணிந்து கையால் தொழுது திருத்தணிகையில் உன்னைப் போற்றித் துதிக்க வல்லார்க்கு அருள் புரியும் நின்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்தருள வேண்டும், எ. று.
ஆடவர் பெண்டிர் என்று எல்லார்க்கும் கல்வி கற்பது பொதுவாதலின் அதனைக் கல்லா தொழிந்த குற்றம் புலப்படக் “கல்லா மடவார்” என்றும், காமப் புணர்ச்சிக்குரியனவே கற்று நினைவு கோடிய மகளிரானமை தோன்றக் “கொடிய மடவார்” என்றும் கூறுகின்றார். அவர்கள் விளைவிக்கும் காமவிச்சை தன்னை விழைந்தாரைத் தன்னிடத்தே ஆழ்த்தி விடுவதால் அதனைக் குழியாக உருவகம் செய்து, “காமக் குழிக்கண் வீழாமே” என்று உரைக்கின்றார். துதிப்பார் துதிக்கும் உரை யெல்லாம் முருகன் திருப்பெயரே யாதலால், “நின் நாமம் துதிக்கும் நலம்” என்கின்றார். அவ்வாறு செய்யும் துதிகள் நற்பண்புடைய செயலாதலால், அதனைப் பெறுதற்கு முருகன் திருவடி ஞானம் சிறந்த ஏதுவாதல் பற்றித் “துதிக்கும் நலம் பெறவே” என்று சொல்கின்றார். சொல்லாற் புனைந்த மாலை, சொல் மாலை எனப்படும். மாலையொடும் என்ற உம்மையால் பூமாலையும் பெய்துரைக்கப்பட்டது. உலகியலில் தோன்றும் பல்வகை ஆசைகளால் தணிகை முருகனைத் துதித்தேத்தும் இயல்பு அமைவதில்லையாதலால், “தணிகை துதிக்க வல்லார்க்கு” என்றும், துதிப்பவர்க்கே திருவடி ஞானம் கைகூடுவ தென்பது தோன்றத் “துதிக்க வல்லார்க்கருளும் நின் திருத்தாள்” என்றும் விளம்புகிறார்.
இதனால் முருகன் திருப்பெயரைச் சொல்லித் துதிக்கும் நலம் பெறும் பொருட்டு அவன் திருவடியைத் தன்முடிமேல் வைக்க வேண்டியவாறாம். (8)
|