27. பிரமனினி யென்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையி லின்னும் ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட குட்டில்
பெறுந் துயர் மறந்து விடுமோ
இரவுநிற முடையியமன் இனியெனைக் கனவினும்
இறப்பிக்க வெண்ண முறுமோ
எண்ணுறா னுதையுண்டு சிதையுண்ட தன்னுடல்
இருந்த வடு எண்ணுறானோ
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனையொரு
காசுக்கு மதியே னெலாம்
கற்றவர்கள் பற்றுநின் திருவருளை யானும்
கலந்திடப் பெற்று நின்றேன்
தரமருவு சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
உரை: மேன்மை பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் உள்ள கோயிலில் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளே, தண்ணிய வொளி பொருந்திய தூய மணிகளிற் சைவ மணியாகிய ஆறுமுகங்களை யுடைய தெய்வ மணியே, எல்லாம் கற்ற பெரியோர்கள் பற்றாகக் கொள்ளும் நின்னுடைய திருவருளில் யானும் கலந்து கொள்ளும் பேறு பெற்றேனாதலால், படைப்புத் தெய்வமாகிய பிரமதேவன் இப்பொழுது என்னை மீண்டும் பிறக்கச் செய்யும் வல்லமை யுடையனாவனோ? ஒருகாலத்தே நீ இட்ட சிறையில் இன்னமும் புகுந்து பிற்பட்டுப் போவனோ? சிறை புகுமுன் நீ குட்டிய குட்டினால் பெற்ற துன்பத்தை அவன் மறந்திருப்பானோ? இருள் நிறமுடையவனான இயமன் இப்பொழுது என்னை இறக்கச் செய்யக் கனவிலேனும் நினைப்பானோ? மறந்து போயினும் சிவபெருமானால் உதையுண்டு புண்பட்டு ஆறிய தன்னுடைய வடுவை நினைக்க மாட்டானோ? மறைந்திருந்து தாக்கும் கன்மம் போந்து வருத்துமோ? தாக்கினும் அதனை ஒரு காசுக்குக்கூட மதிக்க மாட்டேன், எ. று.
எலாம் கற்றவர்கள்-கற்றற்குரிய நூலனைத்தும் கற்றுணர்ந்தவர்கள். அவர்களை நக்கீரர், “யாவதும் கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்” (முருகு) என்று சிறப்பிப்பர். கற்றதனாலாய பயன் முருகப் பெருமான் திருவருளல்லது பற்றுக் கோடு வேறே இல்லை யெனத் தெளிந்து பற்றுவதாகலின், “எலாம் கற்றவர்கள் பற்றும் நின்திருவருள்” என்றும், அது நல்கும் இன்ப ஞான வொளியில் திளைத்துச் செம்மாக்கும் தமது மனப்பண்பை, “நின் திருவருளை யானும் கலந்திடப் பெற்று நின்றேன்” என்றும் வடலூர் வள்ளல் தெரிவிக்கின்றார். உலகைப் படைக்கும் தேவனாதலின், அவனை முதற்கண் நினைக்கின்றார். அவன் இனி என்னைப் பிறக்கச் செய்ய மாட்டான் என்பார், “பிரமன் இனி யென்னைப் பிறப்பிக்க வல்லனோ” என்று கூறுகின்றார். பிறவி நீங்க வேண்டித் திருவருளிற் கலந்தாரை மீளப் பிறப்பித்தல் அறிவிலார் செயலாதலின் “பிறப்பிக்க வல்லனோ” என்கின்றார். “துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள், பிறவி நீங்கப் பிதற்றுமின்” (குடமூக்கில்) என்று நாவுக்கரசர் அறிவுறுத்துவது காண்க. பிரணவப் பொருளைச் சொல்ல மாட்டாமை கண்டு முருகன் பிரமனைக் கந்தமாதனத்தில் சிறையிட்டதைக் குறிப்பிடுதலால், “பெய்சிறையில் ஒருகால் பின்பட்டு நிற்குமோ” எனவும், சிறையிடும் ஆணை பிறப்பிப்பதற்கு முன் மயங்கும் பிரமனை நோக்கிப் “பிரணவமாகிய இதன் பொருள் கருதாய் சிட்டி செய்வது இத்தன்மை யதோ எனாச் செவ்வேள், குட்டினான் அயன் நான்கு மாமுடிகளும் குலுங்க” (அயனைச் சிறைபுரி. 14) எனக் கந்தபுராணம் கூறுவதால், “முன்பட்ட குட்டில் பெறுந்துயர் மறந்து விடுமோ” எனவும் உரைக்கின்றார். மார்க்கண்டேயனது உயிர் கொள்ளும் முயற்சியில் இயமன் சிவனால் உதைபட்டு வீழ்ந்த நிகழ்ச்சியை நினைதலால், “இரவு நிற முடையியமன் இனியெனைக் கனவினும் இறப்பிக்க எண்ணுவானோ”
என்றும், மறந்து என்னுயிரைப் பற்ற முயல்வானாயின் மார்க்கண்டன் பொருட்டுப் பட்டபாட்டைத் தன் மேனி வடுக்கண்டு நினைவுகூர்ந்து நீங்குவன் என்பார், “எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன்னுடல் இருந்த வடு எண்ணுறானோ” என்றும் கூறுகின்றார். சிவனால் உதையுண்ட செய்தியைக் கந்தபுராணம், “மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப், பதைத்தான் என்னா வுன்னி வெகுண்டான் பழி மூன்றும், சிதைத்தான் வாமச்சேவடி தன்னால் சிறிதுந்தி, உதைத்தான் கூற்றன் விண்முகில் போல் மண்ணுற வீழ்ந்தான்” (மார்க்கண்டேய) என உரைக்கின்றது. வினைப் பயன் வரவும் நுகர்விக்கும் நிலையும் இறைவனுக்கல்லது செய்பவனுக்கும் தெரியாதாகலின், “கரவு பெறு வினை” யென்று கூறுகின்றார். “செய்வன் செயலணையா சென்று” (சிவ. போ. 2 : 1) எனவும், “அவ்வினையைப் பேராமலூட்டும் பிரானின நுகராரேல், ஆர்தாம் அறிந்தணைப்பார்” (சிவ 2 : 2) எனவும் சான்றோர் கூறுப. பிரானாகிய சிவபெருமானை வணங்குவாரை வினை சார்ந்து வருத்துதல் இல்லையாதலால் “அதனை ஒரு காசுக்கும் மதியேன்” என வுரைக்கின்றார். “இறைவனதடி பரவுவர்தமை நமையல வினை” (கழுமலம்) என ஞானசம்பந்தர் கூறுவதும், “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு” (குறள்) என முன்னோர் கூறுவதும் காண்க.
இதனால், முருகன் திருவருள் பெற்றார்க்குப் பிறப்பச்சமோ இறப்பச்சமோ வினைத் துன்பமோ அடையா என்பதாம். (27)
|