270. கள்ளக் கயற்கண் மடவார்தம்
காமத் துழலா துனைநினைக்கும்
உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந்
துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
அள்ளற் பழனத் திருத்தணிகை
அரசே ஞான அமுதளிக்கும்
வள்ளற் பெருமான் நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே.
உரை: கரிய சேறுள்ள வயல்களையுடைய திருத்தணிகையில் கோயில் கொண்டருளும் அருளரசனாகிய முருகப் பெருமானே, மெய்ஞ் ஞானமாகிய அமுதத்தை நல்கும் வள்ளலே, கள்ளத் தன்மை பொருந்திய கயல் மீன் போன்ற மாய மகளிரின் காமப்புணர்ப்பிற் சிக்கி வருந்துதலின் நின்னையே நினைந்தொழுகும் மனமுடை அடியவர் கூட்டத்தில் சேர்ந்து மகிழ்ந்து அவர்கள் ஆதரவால் உண்மை ஞானம் பெற்று உன் திருவடி நீழலை அடையும் பொருட்டு நின் திருவடிகளை அடியேன் தலைமேல் வைத்தருள வேண்டும், எ. று. உள்ளத்தில் வஞ்சமும் புறத்தில் கயல் மீன் போன்ற விழியும் கொண்டு உலவுவதால் பொருட் பெண்டிரைக் ”கள்ளக் கயற்கண் மடவார்” எனக் குறிக்கின்றார். அவருடைய தோற்றமும் பார்வையும் காண்பார் உள்ளத்தில் மிக்க காமத்தை யெழுப்பிப் பொருளிழந்து வருந்தும் துன்பத்தை யுண்டு பண்ணுதலால், “மடவார் தம் காமத்து உழலாது” என்று விளம்புகிறார். தொண்டர் மனம் முருகப் பெருமானை இடையறாது சிந்தித்த வண்ண மிருப்பதால், “உனை நினைக்கும் உள்ளத்தவர்” எனவும், அந்நினைவால் அவரிடம் மெய்யுணர்வு நிறைந்து தம்மைச் சேர்ந்தார்க்குச் சென்று நிறையும் சிறப்புடன் திகழ்வதால், “உள்ளத்தவர்பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மையுணர்ந்து” எனவும், உண்மையுணர்வு வீடு பேற்றின்கண் உய்த்தலால், “அங்கு உற்றிடுவான்” எனவும், இயம்புகின்றார். தணிகை மலையைச் சார்ந்த நிலப்பகுதி நன்செய்வள வயல்கள் நிறைந்த தென்பது உணர்த்தற்கு, “அள்ளற் பழனத் திருத்தணிகை” என்றும், முருகப் பெருமான் தன்னை யடைந்தார்க்கு உண்மை ஞானவின்பத்தை வரையாது அளிக்கும் செய்கையன் என்பது விளக்குதற்கு, “ஞான அமுதளிக்கும் வள்ளற் பெருமான்” என்றும் சொல்லிப் பரவுகின்றார்.
இதனால் திருத்தொண்டர் கூட்டம் ஞான வமுதளிக்கும் அப்பெருமான் போலச் சேர்ந்தார்க்கு உண்மை யுணர்வு நல்கும் என்பது தெரிவித்தவாறாம். (9)
|