20. ஆற்றா விரகம்

        ஆற்றா விரகம் என்பது பொதுவாகப் பொறுக்க மாட்டாத காம நோய் என்று பொருள்படும். இங்கே முருகன்பால் ஒருதலைக் காமமுற்ற நங்கை யொருத்தி வேட்கை மிகுந்து வாய் வெருவிப் புலம்பும் நெறியில் பாடப்படும் பாட்டு நிரல். நங்கையின் புலம்புரையாகச் சிலவும், அருள் வேட்கை மீதூர்ந்து வருத்தும் நெறியில் வடலூர் வள்ளல் புலம்புவன பலவுமாக இதன்கண் அமைந்துள்ளன. ஆற்றா விரகத்தைத் தமிழ் இலக்கணம் “மிக்க காமத்து மிடல்” என்று குறிக்கும். இதனைக் கைக்கிளைத் திணையில், “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

272.

    தணிகை மலையைச் சாரேனோ
        சாமி யழகைப் பாரேனோ
    பிணிகை யறையைப் பேரேனோ
        பேரா அன்பு கூரேனோ
    அணிசெய் அருள்நீர் ஆரேனோ
        ஆறாத் தாகம் தீரேனோ
    பணிசெய் தொழும்பில் சேரேனோ
        பார்மீ திரங்கும் நீரேனோ.

உரை:

     நிலத்தின் மேல் இருந்து வருந்தும் நான், திருத்தணிகை மலைக்குச் செல்லமாட்டா தொழிவனோ, அங்கே சென்று சாமியாகிய முருகனது அழகைக் கண்களால் பார்க்கா தொழிவனோ, உடற் பிணிகளால் உண்டாகும் செயலறவாகிய துன்பத்தைப் போக்க மாட்டா தொழிவனோ, நீங்காத அன்பு மிகுவேனோ, அழகு தரும் திருவருளாகிய தண்ணீரைப் பருகா தொழிவேனோ, அதனால் குறையாத வேட்கை தணிய மாட்டேனோ, திருத்தொண்டு செய்யும் அடியார் கூட்டத்தில் சேர மாட்டேனோ, எ. று.

     உலகியல் வாழ்வில் உண்டாகும் துன்பங்களால் வெறுப்புற்றுத் திருவருள் இன்ப வாழ்வில் விழைவு கொண்டு வருந்துகின்றவர்களுக்கு இன்ப வேட்கை மீதூர்தலால் அது நினைந்து எளிதில் எய்த மாட்டாமையால் வருந்தும் உள்ளத்தவராதலின், “பார்மீ திரங்கும் நீரேன்” என்று உரைக்கின்றார். நீரேன் - நீர்மை யுடையேன். நீர்மை - தன்மை. உள்ளத்தில் நிறைந்து நிற்கும் வேட்கை மிக்குறுதலால் முருகனுடைய திருத்தணிகைக்குச் சென்று அப்பெருமானைக் கண்டால் அது தணியும் என்று நினைக்கின்றாராதலால், “தணிகை மலையைச் சாரேனோ” என்றும், அங்கே அப்பெருமான் திருமுன் சென்று நின்று அப்பெருமானது அழகு கண்டு மகழ்வது உடனிகழ்ச்சி யாதலால், “சாமி அழகைப் பாரேனோ” என்றும் உரைக்கின்றார். சாரேனோ, பாரேனோ என்ற எதிர்மறைகள் சார்தல் வேண்டும், பார்த்தல் வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்தும் பொருளில் வந்தன. இவ்வாறே பிற விடங்களிலும் கொள்க. சார்தல் - அடைதல். சாமி, முருகனுக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. “சாமி தாதை சரணாகும்” (புகலூர்) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. அழகுபார்த்து இன்புறுமிடத்துத், துன்பம் செய்யும் உலகியல் பிணிப்பு விளைவிக்கும் பிணிகளால் செயலற் றொழிவிக்கும் துயரம் நினைவில் எழுதலின் அது நீங்க வேண்டும் என்ற விருப்பால், “பிணி கையறையைப் பேரேனோ” என்றும், அதற்கேதுவாவது நீங்காது நிலைபெறும் அன்பாதலால், “பேரா அன்பு கூரேனோ” என்றும் உரைக்கின்றார். கையறவு, கையறை என வந்தது; அஃதாவது செயலற்றொழிதல். பேர்தல்-நீங்குதல். கூர்தல் - மிகுதல். உயிரறிவில் தோய்ந்து இருள் செய்யும் மல வழுக்கைத் திருவருள் போக்குதலின் அதனை நீராக உருவகம் செய்து தனது அறிவு, மலவழுக்குக் கழுவப் பெற்று அழகுறுகின்றமை தோன்ற, “அணிசெய் அருள்நீர் ஆரேனோ” எனவும், அருள் ஞானத்தை அவாவும் தமது ஆர்வத்தை, “ஆறாத் தாகம் தீரேனோ” எனவும் விளம்புகின்றார். “தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்” (அடைக்) என்று திருவாசகம் ஓதுவது காண்க. ஞானச் சூழலாதலின் அதனைச் சேர்தல், பெற்ற திருவருள் ஞானத்தை இழவாமைப் பொருட்டு. அது பற்றிப் “பணிசெய் தொழும்பில் சேரேனோ” என்று கூறுகின்றார். பணிசெய் தொழும்பு - திருத்தொண்டு புரியும் அடியவர் கூட்டம்.

     இதனால் தணிகை யடைந்து முருகனது திருவழகு பார்த்து உலகியல் துயரம் தணிந்து திருவருள் ஞானம் பெற்றுத் திருத்தொண்டர் கூட்டத்துட் சேர்ந்து கொள்ளற்கெழும் தீரா வேட்கை தெரிவித்தவாறாம்.

     (1)