274. செய்கொள் தணிகை நாடேனோ
செவ்வேள் புகழைப் பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ
கருணைக் கடலில் நீடேனோ
மெய்கொள் புளகம் மூடேனோ
மெய்யன் பர்கள்பால் கூடேனோ
பொய்கொள் உலகோ டூடேனோ
புவிமீ திருகால் மாடேனே
உரை: நிலத்தின் மேல் இரண்டு கால் கொண்ட மாடு போன்ற நான் வயல்கள் பொருந்திய திருத்தணிகைப் பதியை நினைக்க மாட்டேனோ, அங்கு எழுந்தருளும் செவ்வேளாகிய முருகனுடைய புகழ்களைப் பாட மாட்டேனோ, அவன் திருமுன்பு நின்று இரு கைகளையும் தலைமேல் குவித்து ஆட மாட்டேனோ, அவனுடைய திருவருளாகிய கடலில் மூழ்க மாட்டேனோ, அருளைப் பெற்ற மகிழ்ச்சியால் உடம்பு புளகிக்க மாட்டேனா, அவனுடைய மெய்யன்பர்களோடு சேர மாட்டேனா, பொய்யான உலக வாழ்க்கையைத் துறந்தொழிவேனோ, எ. று.
புல்லும் நீரும் உள்ள இடத்தையே நாடிச் செல்லும் மாடு போல் பொறி புலன்கட் கேற்ற சுவை தரும் பொருகளையே நோக்கிச் செல்லும் இயல்புடைமை தம்பால் உண்மை கண்டு வருந்துவாராய்ப் “புவி மீது இருகால் மாடேன்” என்று இசைக்கின்றார். மாடேன் - மாடு போன்ற யான். மாட்டின் இயல்புடைய யான் புல்லும் நீரும் மிக்க வயல்களை யுடைய தணிகைப் பதியை அடைய வேண்டியவனாயினும், அது தானும் செய்கிலேன் என்பார், “செய்கொள் தணிகை நாடேனோ” எனவும், காமவேளின் நீக்குதற்கு முருகனைச் “செவ்வேள்” எனவும் இயம்புகிறார். நாடுதல் - விரும்பிச் செல்லுதல். காமவேள் கருப்பு நிறமுடையவன்; செவ்வேள் சிவந்த திருமேனி யுடையவன். அருட் செய்கையாலும் பகை வரைப் பொருதழித்தலாலும் பல் புகழ் பெற்றவனாதலால், “செவ்வேள் புகழைப் பாடேனோ” என்கின்றார். புகழ் பாடுவோர் இருவினைத் தொடர்பறுத்து உய்தி பெறுவர் என்ப; “இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. பத்தி மிகுதியால் முருகன் திருமுன்படைந்தோர் தம் வயமிழந்து கூத்தாடுவது பற்றிக் “கைகள் கூப்பி யாடேனோ” என்றும், அந்நிலையில் அவர்களின் மனம் இன்பம் பொங்கித் துடிப்பது உணர்ந்து கூறலின், “கருணைக் கடலில் நீடேனோ” என்றும் இயம்புகிறார். இன்ப நுகர்ச்சி சிறிது போதில் மாறுதலால், திருவருளின்பம் நீடித்தல் வேண்டும் எனத் தாம் விழைவது தோன்ற, “நீடேனோ” எனக் குறிக்கின்றார். இன்ப நுகர்ச்சி யுறுவோரது உடம்பு அதனால் விளையும் மகிழ்ச்சிப் பூரிப்பால் விம்மிதம் அடைவது பற்றி, “மெய்கொள் புளகம் மூடேனோ” எனவும், இந்நிலைமையே எய்தி மகிழும் தொண்டர் கூட்டம் காணப்படுதலால், அவருள் ஒருவனாதல் வேண்டுமென விருப்பம் எழுதலின், “மெய்யன்பர்கள்பால் கூடேனோ” எனவும் உரைக்கின்றார். உண்மை யன்புடையார்க் கன்றித் தொண்டராம் புண்ணியம் எய்தாதாதலால் தொண்டர்களை, “மெய்யன்பர்கள்” எனச் சிறப்பிக்கின்றார். பொய்யன்பும் பொய்ம் மொழியும் பொய்ச் செய்கையும் நிறைந்தது உலகியல்; அதனிடையே வாழும் தம்மை அப்பொய்ம்மை தாக்கித் துன்புறுத்தலை எண்ணி அதனைத் துறந்து நீங்கும் மனமுடையனாதலை விரும்புமாறு தோன்றப் “பொய்கொள் உலகோடு ஊடேனோ” என்று சொல்லுகிறார். ஊடுதல், ஈண்டு வெறுத்து நீங்குதல் குறித்தது.
இதனால், உலகின் பொய்ம்மையைத் துறந்து முருகன் திருவருளிற் கலந்து மெய்யன்பர் கூட்டத்திற் சேர்ந்துறைய வேண்டும் ஆர்வத்தை வெளியிட்டவாறாம். (3)
|