275. வந்தென் எதிரில் நில்லாரோ
மகிழ ஒருசொல் செல்லாரோ
முந்தம் மதனை வெல்லாரோ
மோகம் தீரப் புல்லாரோ
கந்தன் எனும்பேர் அல்லாரோ
கருணை நெஞ்சம் கல்லாரோ
சந்தத் தணிகை இல்லாரோ
சகத்தில் எல்லாம் வல்லாரே.
உரை: உலகில் எல்லாம் வல்லவராகிய முருகப் பெருமான் என் கண்முன் வந்து நிற்கமாட்டாரா, என் மனம் இன்புறும் படியாக ஒருசொல் சொல்ல மாட்டாரா, மகளிராசை மேல் செலுத்தும் மன்மதனை வீழ்த்த மாட்டாரா, எனது மயக்கம் நீங்கும்படியாக என்னைச் சேரமாட்டாரா, கந்தன் என்னும் பெயருடையவரல்லரோ, அருளுருவாகிய தனது நெஞ்சத்தைக் கல்லாக்கிக் கொண்டாரா, அழகிய தணிகைப் பதியில் இல்லாது போயினரா, அறிகிலேன், எ.று.
முருகப் பெருமானை அடைய வேண்டுமென்ற வேட்கை கணந்தோறும் பெருகிக் கொண்டேயிருப்பதால் அப்பெருமான் தானே வந்து கண்ணெதிரே நின்று காட்சி தந்து இனிய சொற்களை கூறி மகிழ்விக்க வேண்டும் என்பாராய், “வந்தென் எதிரில் நில்லாரோ, மகிழ ஒருசொல் சொல்லாரோ” என்றும் உரைக்கின்றார். காதல் வேட்கை உள்ளத்தில் தோன்றிக் கிளர்ந்தெழச் செய்வது காமவேள் செயலாதலினாலும், அதனால் மனத்தில் மயக்க முண்டாவதாலும் அதற்குத் தம்பால் இடமுண்டாதல் கூடாதென்று கூறுவாராய், “முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ” என்று உரைக்கின்றார். முந்துதல் - முற்படச் செலுத்துதல். வெல்லுதல் - வீழ்த்தல். புல்லுதல் - தழுவிக் கொள்ளுதல். முருகனுடைய பெயர்களில் ‘கந்தன்’ என்பது கூடுபவன் என்னும் பொருளதாகலின் அப்பெயர்க்கேற்ப என்னைக் கூட வேண்டிய அவன் அது செய்திலனே என்ற வருத்தத்தால், “கந்தன் எனும் பேர் அல்லாரோ” எனவும், அருளுருவாகிய அப்பெருமான் அருள் செய்யத் தாழ்ப்பது பொறுக்க மாட்டாமையால், “கருணை நெஞ்சம் கல்லாரோ” எனவும், தணிகைப் பதியில் இருந்து கொண்டு தாம் செய்யும் முறையீட்டைக் கேளார் போல் இருப்பது பற்றிச் “சந்தத் தணிகை இல்லாரோ” எனவும் சொல்லி வருந்துகிறார். சந்தம் - அழகு.
இதனால் நங்கை யொருத்தி முருகன்பால் தீராக் காதல் கொண்டு புலம்புவது போலத் தமது உள்ளத்தில் நிறைந்த காதலால் வள்ளலார் தமது திருவருள் வேட்கையைப் புலப்படுத்தியவாறாம். (4)
|