276.

    நாட்டும் தணிகை நண்ணேனோ
        நாதன் புகழை யெண்ணேனோ
    கூட்டும் தொழும்பு பண்ணேனோ
        குறையா வருணீர் உண்ணேனோ
    சூட்டு மயக்கை மண்ணேனோ
        தொழும்ப ரிடத்தை யண்ணேனோ
    காட்டு மவன்றாள் கண்ணேனோ
        கழியா வாழ்க்கைப் புண்ணேனே.

உரை:

     நன்னெறியிற் செலுத்தாத வாழ்க்கையாற் புண்ணுற்ற யான் புகழ் நிறுவிய தணிகை மலையை யடைய மாட்டேனா; தலைவனாகிய முருகப் பெருமான் புகழை நினையா தொழிகுவனோ: ஞான நெறியிற் செலுத்தும் தொண்டினைச் செய்ய மாட்டேனோ; அதன் வாயிலாகத் திருவருளாகிய நீரைப் பருகுவேனோ; அறியாமையைச் செய்யவும் மல வழுக்கைக் கழுவிக் கொள்ள மாட்டேனா; அடியவர் உறையும் ஞானநிலையை நெருங்க மாட்டேனோ; ஞான வொளி திகழும் அவர்களது திருவடிகளையே எண்ணி யமையா தொழிவேனோ, எ.று.

     நன்னெறி யடைதற்குக் காரணமாகத் தோன்றிய உலக வாழ.க்கையைப் பிறப்பிறப்புக் கேதுவாய வினைகளிற் செலுத்தி அவற்றின் தொடர்பு நீங்காவாறு பிணித்துக் கொண்டு வருந்துகின்றமை தோன்றக் “கழியா வாழ்க்கைப் புண்ணேன்” என்றும், அப்புண்ணை யாற்றிக் கோடற்கு நல்ல மருந்தாவது தணிகை சென்று முருகப் பெருமான் புகழை மனத்தால் எண்ணி வாயாற்றுதித்தலாம் என்பது கொண்டு, “நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ” என்றும் உரைக்கின்றார். நாட்டப்படுவது புகழாதலால், புகழ் நாட்டிய தணிகை யென வுரைக்கப்பட்டது. எண்ணுவதன் பயன் வாயால் ஓதுவதாகலின், அஃது எஞ்சி நிற்கிறது. தொழும்பு - ஞானத் தொண்டு; அது ஞான நெறியாய்த் திருவருளிற் கூட்டும் சிறப்புடைய தென்றற்குக் “கூட்டும் தொழும்பு” எனப்படுகிறது. தொழும்பு பண்ணுவதன் பயனாகத் திருவருள் இன்பம் எய்துதலால், அதனை நீராய் உருவகம் செய்து, இன்ப நுகர்ச்சியைக் “குறையா அருள்நீர் உண்ணேனோ” என்று உரைக்கின்றார். மேன்மேலும் பெருகும் இயல்பிற்றாதலால், “குறையா அருள் நீர்” எனச் சிறப்பிக்கின்றார். “புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்” (கண்ணப். 42) எனச் சேக்கிழார் தெரிவிப்பது காண்க. திருவருள் நெறியில் தோய்ந்த வழியும் மலவாதனை போந்து உயிரறிவை மயக்குதலால் அதனை, “மலம் சூட்டும் மயக்கு” எனவும், அது வேண்டாது படியும் அழுக்காகக் கருதி அதனைத் துடைத்தொழித்துக் கழுவிக் கோடல் முறையாதல் விளங்கச், “சூட்டும் மயக்கை மண்ணேனோ” எனவும் புகல்கின்றார். மண்ணுதல் கழுவுதல். அடியார் இருக்கும் சூழல் ஞான நிலையமாதலால் அதன்கண் அடைதல் மலவாதனை மீளத் தாக்காமைக்கு அரணாவது பற்றித் “தொழும்பர் இடத்தை அண்ணேனோ” என்றும், அவர்கள் திருவருள் ஞானிகளாதலால், அவர் திருவடியைப் பணிந்தொழுகுவது திருவருட் பேற்றுக்கு வாயிலா மென்பது உணர்த்தற்குக் “காட்டும் அவர்தாள் கண்ணேனோ” என்றும் இயம்புகின்றார். கண்ணுதல் - கருதுதல். “பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக ஆங்கொன்றைக் கண்ணியவர்” (சித. செய். கோவை) என்று குமரகுருபரர் கூறுவது காண்க. இதனால், தணிகை யடைந்து முருகன் புகழ் பாடித் தொண்டு செய்து திருவருளின்பம் பெறுதற்கும் பெற்றது நீங்காவாறு பேணுதற்கும் எழும் பெருங் காதலை யுரைத்தவாறாம்.

     (5)