277. காமப் பயலைத் தடுப்பாரோ
கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
ஏமத் தனத்தைக் கடுப்பாரோ
என்மே லன்பை விடுப்பாரோ
மாமற் றொருவீ டடுப்பாரோ
மனத்திற் கோபம் தொடுப்பாரோ
தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ
தணிகை தனில்வே லெடுப்பாரே.
உரை: திருத்தணிகைப் பதியில் கையில் வேலேந்தி வீற்றிருக்கும் முருகப் பெருமான், காமவிச்சையால் மேனியிற் படரும் பசலை எனக்குண்டாகாதபடி தடுத் தருளுவாரோ; தாம் அணியும் கடப்பமலர் மாலையைக் கொடுத்தருளுவாரோ; என்பாலுள்ள ஆசை மயக்கத்தைப் போக்குவாரோ; என் மேல் தமக்குள்ள அன்பை விட்டொழிப்பாரோ; மற்றொரு பெரிய வீட்டுக்குச் சென்று விடுவாரோ; அது பெறாத என் மேற் சினம் கொள்ளுவாரோ, தெரிகிலேன், எ.று.
எப்போதும் நீக்கமின்றிக் கைக்கண் ணிருக்கும் சத்தி வேலாதலால், “வேல் எடுப்பார்” என முருகப் பிரானைப் புகழ்கின்றார். முருகனை யடைதற்கு மிக்க வேட்கை கொண்ட நங்கை யொருத்தியின் கூற்றாக இது பாடப்படுதலால், காம வேட்கையுற்ற இளமகளிர் நெற்றியிலும் கண்ணிலும் புகை படிந்தாற் போல் தோன்றும் பசலையை விதந்து, “காமப் பயலைத் தடுப்பாரோ” என நங்கை யுரைக்கின்றாள். பசலை, பயலை என்றும் வழங்கும். “கயலெனக் கருதிய வுண்கண் பயலைக் கொல்கா வாகுதல்” (ஐங். 36) எனச் சான்றோர் வழங்குவது காண்க. தலைவன்பால் கொண்ட வேட்கையால் உண்டாகிய வெம்மை அவனது மார்பிலணிந்த மாலையை வாங்கி அணிந்து கொள்ளின் தணியும் என்னும் மரபு பற்றி முருகனது மார்பிலணியும் கடம்பு மாலையை விழைகின்றாளாதலின், “கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ” எனவும், தலைக்கேறும் காம மயக்கம் செயலற்றுக் கிடக்கச் செய்தலால் அதனைப் போக்க வேண்டு மென்பாள், “ஏமத் தனத்தைக் கடுப்பாரோ” எனவும் கூறுகின்றாள். ஏமத்தனம் - மயக்கத் தன்மை. கடுத்தல் - போக்குதல் ; நீக்கப் பொருளதாகிய கடி என்னும் உரிச் சொல்லடியாகப் பிறக்கும் வினைச் சொல். மாமற்றொரு வீடு, மற்றொரு மாவீடு என இயையும். மாவீடு - பரங்குன்றம், ஆவினன்குடி முதலிய பெரிய படை வீடுகள். தான் வந்து வணங்கும் தணிகையை விட்டு வேறு திருப்பதிக்குச் செல்வது கண்டு யான் பொறாதது அறிந்து வெறுப்புற்று என்னை வெகுள்வாரோ என்று அஞ்சுகின்றமை புலப்பட, “மனத்திற் கோபம் தொடுப்பாரோ” எனச் சொல்லுகின்றார். வேட்கை மிகுதி தாமத குணத்தை மேற்படச் செய்வதால் அதனை யுடையவர்க்கு இளிவரல் உண்டாவது பற்றித் “தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ” என வாய் வெருவுகின்றாள். தாமத் தாழ்வு - தாமத குணத்தால் உண்டாகும் இளிவரல்.
இதனால், வேட்கை மிக்குற்ற நங்கை ஆற்றாமையால் வாய் வெருவும் திறம் கூறியவாறாம். (6)
|