278.

    காவி மலைக்கண் வதியேனோ
        கண்ணுண் மணியைத் துதியேனோ
    பாவி மயலை மிதியேனோ
        பரமா னந்தத் துதியேனோ
    வோவி லருளைப் பதியேனோ
        வுயர்ந்த தொழும்பிற் கதியேனோ
    தாவில் சுகத்தை மதியேனோ
        சற்றும் பயனில் லொதியேனே.

உரை:

     சிறிதும் பயன்படாத ஒதி மரம் போன்ற யான் திருத்தணிகை மலைக்கண் தங்குவேனோ; கண்ணிலுள்ள மணி போன்ற முருகப் பெருமானைத் துதிக்க மாட்டேனா; பாவியாகிய மயக்கத்தைப் போக்க மாட்டேனா; மேலான ஆனந்தத்தில் உதிக்க மாட்டேனா; நீக்க மில்லாத திருவருள் பதியப் பெற மாட்டேனா; உயர்ந்த தொண்டர் கூட்டத்தில் பிறக்க மாட்டேனா; கெடாத ஞான வின்பத்தைக் கருத மாட்டேனா; எளியேன் என் செய்வேன், எ.று.

     ஒதி மரம் உள்வலி இல்லாத தாகலின் அது எதற்கும் பயன்படுவது இல்லை; அதனால் “சற்றும் பயனில் ஒதியேனே” என்று தம்மை இகழ்கின்றார். காவி மலை -தணிகைமலை. நாள்தோறும் மூன்று பூக்கள் சுனையில் பூப்பது பற்றிக் “காவி மலை” எனவும், அல்லகாத்திரி எனவும், தணிகை மலையைப் புராணிகர் கூறுதலால் காவிமலை எனப்படுகிறது. “வைகல் தோறும் மலர் மூன்று கோலமார் காவி யுயிர்த்தலின் அல்ல காத்திரி” (தணிகைப் புரா. வா. 59) என்பர் கச்சியப்பர். கண்ணிலுள் மணி கண்ணுக்கு ஒளியும் காட்சியும் உதவுவது போல உயிர்கட்கு அருளொளியும் ஞானக்காட்சியும் அருளுதல் பற்றி முருகனைக் “கண்ணுள் மணி” என்று சிறப்பிக்கின்றார். பாவி - பாவம் செய்தவன். மயல் - பாவச் செயல்களுக் கெல்லாம் காரணமாகும் மயக்கம். மிதித்தல் - போக்குதல். மேலான இன்பப் பேற்றுக்கு மயலில்லாத தெளிவு ஏதுவாகலின், “மயலை மிதியேனோ” என்றவர், “பரமானந்தத்து உதியேனோ” என்கின்றார். பரம் - மேன்மை. ஆனந்தப் பேற்றுக்கு அருட் பதிவு இன்றியமையாமையின், “ஓவில் அருளைப் பதியேனோ” என்றும், பரம் பொருளினின்றும் நீக்க மின்றி இருப்பதாதலால் திருவருளை, “ஓவில் அருள்” என்றும் உரைக்கின்றார். அதனைச் சைவநூல்கள் சத்தி நிபாதம் என்று வழங்குகின்றன. பரஞானச் செல்வர்கள் கூட்டத்தை, “உயர்ந்த தொழும்பு” எனவும், அவர்களில் ஒருவனாதல் வேண்டும் என்ற விழைவால், “கதியேனோ” எனவும், அவர்கள் கூட்டத்தில் சேர்ந்து ஒழுகுவதால் ஞானப் பேரின்ப மல்லது வேறு நினைக்கப் படாமை எய்துதலால், “தாவில் சுகத்தை மதியேனோ” எனவும் இயம்புகிறார்.

     இதனால் ஞானப் பேற்றின்கண் உளதாகிய பெரு விருப்பம் வெளிப்படுத்த வாறாம்.

     (7)