279.

    வருந்தும் தனிமுன் மன்னாரோ
        வருத்தம் உனக்கேன் என்னாரோ
    இருந்தென் இடத்தே துன்னாரோ
        இணைத்தாள் ஈய உன்னாரோ
    பொருந்திய கயலார் அன்னாரோ
        பொருள்ஈ தென்று பன்னாரோ
    செருந்தி மலரும் திருத்தணிகைத்
        தேவர் எவர்க்கும் முன்னாரே.

உரை:

     செருந்திகள் பொன்னிறப் பூக்களை மலரும் திருத்தணிகைத் தேவராய்ப் பிற யாவருக்கும் முன்னவராகிய முருகப் பெருமான் தனித்திருந்து வருந்தும் என் முன் வந்து நிற்பாரா; என்னைப் பார்த்து உனக்கு வருத்தம் ஏன் என்று கேட்க மாட்டாரா; என் பக்கம் இருந்து என் நெஞ்சிடத்தே கூடுவாரா; தமது இரண்டாகிய திருவடிகளை எனக்கு நல்க நினைக்க மாட்டாரா; இங்கே என் அருகிலிருந்து அயலார் போல ஒழுகுவாரா; மெய்ப்பொருள் இதுவென்று உரைத்தருளுவாரா; ஒன்றும் தெரிகிலேன், எ.று.

     செருந்தி, பொன் போலப் பூக்கும் ஒருவகைக் கோரை, “செருந்தி செம்பொன் மலரும் சோலை” (ஆரூர்) என்று சுந்தரமூர்த்தி கூறுவது காண்க. உலகில் தொடர்பு நீங்கித் தனித்திருக்கும் மனநிலையராதலின், தம்மைத் “தனி” எனவும், தனிமை, திருவருட் பெறாமை நினைந்து மனநோய் தருதலால், அதனை எண்ணி அருட் காட்சி நல்க வேண்டியவர், அது செய்யாராகின்றார் என்பாராய் வடலூர் வள்ளல், “வருந்தும் தனிமுன் மன்னாரோ” எனவும், எளியேன் கண் முன்னே தோன்றி நின்று வருந்த வேண்டா என்று வினவுகின்றா ரில்லையே என்ற ஏக்கத்தால், “வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ” எனவும் சொல்லிப் புலம்புறுகின்றார். என் பக்கத்தே யிருந்து எனது நெஞ்சகத்தைத் தமக்குரிய இடமாக்கிக் கொண்டாராயின் துன்பம் யாதும் என்னை யடையா என்பாராய், “இருந்து என்னிடத்தே துன்னாரோ” எனவுரைக்கின்றார். துன்னுதல் - நெருங்குதல், பொருந்துதலுமாம். திருவடி, ஞானப் பொருளாதலால், அதனைத் தந்து மெய்யுணர்வுப் பேற்றுக்குரியனாக்க மாட்டாரா என விரும்புகின்றமையின், “இணைத்தாள் ஈய வுன்னாரோ” என்றும், அது செய்யாமையை நினைந்து இவ்விடத்தே பொருந்தி யிருந்தும் அயலார் போல் புறக்கணிக்கின்றாரே என்றும் இயம்புகின்றார். இங்கே, நம்முடன் பொருந்தி யிருந்தருளும் அப்பெருமான் அயன்மை யுடையவரல்லர் என உள்ளுணர்வு கூறக்கேட்டு அப்பெற்றியராயின், தனிமைத் துன்ப வாழ்வின் உண்மைப் பொருள் இஃது என உணர்த்துதல் வேண்டுமே; அதனைச் செய்யவில்லையே எனத் துளங்குதலால், “பொருள் ஈதென்று பன்னாரோ” என உரைக்கின்றார். பன்னுதல்-சொல்லுதல். ஒன்றும் தெரிகிலேன் என்பது குறிப்பெச்சம்.

     இதனால், உலகியல் தொடர்பின் நீங்கி மனத்தால் தனிமை யுற்றுப் பற்றுக் கோடின்றி வருந்துபவர், பற்றாய திருவருட் பேறு பற்றி நினைவின் கண் எழும் எண்ணங்களை எடுத்தோதுமாறு காணலாம்.

     (8)